திண்டுக்கல் மாநகரின் மையப்பகுதியில் அபிராமி அம்மன் (காளஹஸ்தீஸ்வரர்) கோவில் உள்ளது. இந்த கோவில் கட்டுப்பாட்டில் தான் செல்லாண்டியம்மன் கோவில் இருந்து வருகிறது. இக்கோவில் தெய்வமான செல்லாடியம்மன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கூரை கொட்டகை கூட இல்லாமல் மழையிலும் வெயிலிலும் இருந்து வந்ததைப் பார்த்த அப்பகுதியில் உள்ள அண்ணன் தம்பிகளான, பழனிச்சாமி மணியமும், வீரப்பமணியமும் தான் செல்லாண்டி அம்மனை எடுத்து வழிபட்டதின் மூலம் பூசாரிகளாகவும், கரக பூசாரிகளாகவும் இருந்து வந்தன. அதன்பின் தான் கூரை கொட்டகை அமைத்து படியில் ஏறி செல்லாண்டி அம்மனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சாதி மதம் பார்க்காமல் வழிபட்டும் வந்தனர். அது போல் செல்லாண்டியம்மனுக்கு தை பிறந்தாலே திருவிழாவும் நடப்பது வழக்கம் இந்த திருவிழா மூன்று நாள் மிக விமர்ச்சியாக நடைபெறும்.
இதில் பழனிச்சாமி மணியம், வீரப்ப மணியம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களான எம்.பி. ஆறுமுகம், மாரிமுத்து, கணேசன், முத்து ராமலிங்கம் ஆகியோர் தொடர்ந்து பூசாரிகளாகவும் கரகப் பூசாரிகளாகவும் இருந்தும் வந்தனர். தற்போது இருந்தும் வருகிறார்கள். இப்படி பாரம்பரியமாக இருந்து வரும் பூசாரி மற்றும் கரக பூசாரிகள் முன்னிலையில் தான் திருவிழாவும் வருடம் தோறும் நடந்து வருகிறது. இக்கோயில் அபிராமி அம்மன் கோவில் கட்டுப்பாட்டில் இருந்து வந்ததால் திருவிழாவின் போது உற்சவர் சிலையை மட்டும் வாங்கி வந்து திருவிழாவை நடத்திவிட்டு பிறகு கோவிலில் ஒப்படைப்பது விடுவதும் வழக்கமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையின் தான் கடந்த 1992ம் வருடம் இப்பகுதி மக்களின் நன்கொடை மூலம் முதன்முதலில் கோபுரத்துடன் செல்லாண்டியம்மன் கோவில் கட்டப்பட்டு வெகு விமர்சியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவில் சார்பில் கோவிலில் உண்டியல் வைக்கப்பட்டது. இந்த உண்டியலில் மூலம் பக்தர்கள் இடும் காணிக்கை அபிராமி கோயில் இருந்து அலுவலர்கள் வந்து எண்ணிச் சென்று வருவது வழக்கம். இப்படி புதிதாகக் கட்டப்பட்ட கோவிலில் தாங்கள் என்னென்ன உதவிகள் செய்தார்களோ அந்த உபயதாரர்கள் பெயரோடு அனைத்து பொருட்களும் இருந்தன. அதன்பின் 12 வருடங்களுக்குப் பிறகு குடமுழுக்கு நடந்தது. அடுத்த சில வருடத்துக்குள்ளாகவே கோவில் பழுதடைந்து விட்டதாகவும் கோயிலைக் கருங்கல்லால் கட்டுகிறோம் என்று கூறி கோயிலை இடித்து விட்டனர்.
அதன்பின் புதியக் கோயில் திருப்பணிக்காகக் கோவில் பூசாரி மற்றும் கரக பூசாரிகளோடு புதிய நிர்வாகிகள் நியமித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நகரில் முக்கிய வி.ஐ.பி.களிடம் வசூல் பார்த்து வந்தனர். அது நாளாக நாளாகச் சிலர் கட்டுப்பாட்டில் கோயில் நன்கொடை பணமும் கோயில் கட்டும் பணியும் வந்ததே தவிரக் கோவில் பூசாரி மற்றும் கரகபூசாரி குடும்பங்களையும் சரிவரக் கண்டு கொள்வதில்லை. அதைத் தொடர்ந்து தான் ஆறு வருடங்களாகப் பொதுமக்கள் மற்றும் விஐபிகளிடம் வசூல் பார்த்துக் கடந்த வருடம் தான் கோயிலை முழுமையாகக் கட்டி குடமுழுக்கையும் கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி (27.10.2023) மிக விமர்ச்சியாக நடத்தினார்கள். ஆனால் கோயிலுக்குப் பல லட்சம் பணமும் பொருள் உதவிகளும் பலர் நன்கொடை வழங்கியும் கூட பழைய மாதிரி உபயதாரர்கள் பெயர்கள் எல்லாம் போடவில்லை.
அதுபோல் கோயில் மூலஸ்தானம் மட்டுமே கருங்காலால் கட்டப்பட்டு இருக்கிறதே தவிர. பழைய மாதிரி கோயிலில் சிற்பங்களும் உட்காருவதற்கான வசதிகள் சரிவர இல்லை என்ற முணுமுணுப்பும் அப்பகுதி மக்களிடம் இருந்து வருகிறது. அதோடு மூலஸ்தான செல்லாயின் சிலை பீமம் குறைந்து இருக்கிறது. அதைப்பற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் ஆறு வருடங்களுக்குப் பிறகு கடந்த தை மாதம் செல்லாயின் திருவிழாவும் நடைபெற்றது .இவ்வாறு குடமுழுக்கைத் தொடர்ந்து செல்லாண்டியம்மன் திருவிழா நடைபெற்றது அப்படி இருந்தும் கூட குடமுழுக்கு மற்றும் திருவிழா கணக்கு வழக்குகளையும் கூட கூட்டம் போட்டுச் சொல்ல ஆர்வம் காட்டவில்லை. அது போல் கோவிலில் உண்டியலும் வைக்கவில்லை.
இதனால் செல்லாண்டியம்மனுக்கு நேர்ந்துவிட்டு மக்கள் காணிக்கை செலுத்துவதும், செலுத்த முடியாமலும் சிலர் தட்டிலும் செலுத்தி வந்தனர். அதன்பின் தான் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அபிராமி அம்மன் கோவிலில் இருந்து புதிதாக ஒரு பெரிய இரும்பு உண்டியலை வாங்கி செல்லாண்டியம்மன் கோவிலுக்குக் கொடுத்தனர். அப்படி இருந்தும் அந்த உண்டியலைச் சிலர் கோயிலில் வைக்காமல் கோயில் வெளிப்புறத்தில் வைத்துத் தகரத்தைப் போட்டு மூடி கிடப்பில் வைத்து விட்டனர். இதனால் மழையிலும், வெயிலிலும் இந்த இரும்பு உண்டியல் இருக்கிறது. இது சம்பந்தமாக அபிராமி அம்மன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள இணை ஆணையர் கார்த்திக் அவர்களிடம் கேட்ட போது, “நான் தற்பொழுது தன் புதிதாக இங்கு வந்திருக்கிறேன். நீங்கள் சொல்லித்தான் இந்த விஷயமே தெரிகிறது. உடனடியாக இ.ஓ.வை அனுப்பி விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்”என்றார் உறுதியாக.