Skip to main content

விரட்டி விரட்டி கடித்த கரடி; மலையோர கிராம மக்களின் திக் திக் வாழ்க்கை

Published on 07/11/2022 | Edited on 07/11/2022

 

The bear that bitten human

 

தென்காசி மாவட்டத்தின் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள சிவசைலம், மற்றும் பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் இருப்பதால் அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் உண்டு. பயிர்களை சேதப்படுத்துதல், கால் நடைகள் மற்றும் மனிதர்களைத் தாக்குவது போன்றவை அடிக்கடி நடப்பதுண்டு. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடனேயே காலத்தை ஓட்ட வேண்டிய சூழல்.

 

நேற்றைய தினம் கடையம் பகுதியின் கருத்தலிங்கபுரத்தைச் சேர்ந்த மசாலா வியாபாரம் செய்து வருகிற வைகுண்டமணி என்பவர், சிவசைலத்திலிருந்து பெத்தான் பிள்ளை குடியிருப்பு கிராமத்திற்கு வியாபாரம் பொருட்டு தனது பைக்கில் சென்றிருக்கிறார். அது சமயம் சாலையின் குறுக்கே வந்த கரடி ஒன்று திடீரென்று அவரது பைக்கை மறித்து அவரைக் கீழே தள்ளி கடித்துக் குதற அவர் கதறியிருக்கிறார். சப்தம் கேட்ட ஊர் பொதுமக்கள் விரைந்து வந்து அவரைக் காப்பாற்ற முயன்றனர். அது சமயம் மக்களை விரட்டிய கரடி, நாகேந்திரன், சைலப்பன் எனும் இருவரையும் விரட்டி விரட்டி கடித்துக் குதறியிருக்கிறது. மூன்று பேரின் உடலில் பலத்த காயங்கள். முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் கிடக்க, மற்றவர்களையும் விரட்டியது கரடி. தப்பிக்க ஓடிய பொதுமக்களில் சிலர் காயமடைந்தனர்.

 

The bear that bitten human

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி படுகாயமடைந்த மூன்று பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப, மேல் சிகிச்சைக்கு அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

இந்த சம்பவத்தால் கொதித்துப் போன பொதுமக்கள் மற்றும் காயமடைந்த உறவினர்கள் உள்ளிட்டவர்கள் திரண்டு சென்று கடையம் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறைந்திருக்கும் கரடியைப் பிடிக்க வேண்டுமென்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் ஏ.டி.எஸ்.பி.பொன்னரசு, தென்காசி வட்டாட்சியர் ஆதிநாராயணன், வனச்சரகர் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி 2 நாளில் பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து ஒரு சில மணி நேரம் நடந்த மக்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

 

The bear that bitten human

 

இதனிடையே வனத்துறையினர் கரடியின் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணித்ததில் காட்டுப் பகுதியில் கரடி பதுங்கியிருந்ததைக் கண்டுபிடித்தனர். அதையடுத்து நேற்றிரவு ஏழு மணியளவில் நெல்லை ராமையன்பட்டி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன், கால்நடை ஆய்வாளர் அர்னால்ட் ஆகியோர் கரடி மறைந்திருந்த பகுதியின் 15 அடி தொலைவிலிருந்து 2 முறை மயக்க ஊசி செலுத்தினர். அதில் கரடி மயங்கியதும் வனத்துறையினர் வலை மூலம் கரடியைப் பிடித்து வனத்திற்குள் விட்டனர்.

 

ஆனாலும் மலையோர கிராமங்கள் திக் திக் மனநிலையில் உள்ளன.

 


 

சார்ந்த செய்திகள்