திண்டுக்கல் மாவட்டத்தில் அகரம், ஆயக்குடி, தாடிக்கொம்பு, வடமதுரை, அய்யலூர், சின்னாளபட்டி, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, அம்மையநாயக்கனூர், நெய்காரப்பட்டி, கீரனூர், ஸ்ரீராமபுரம், கன்னிவாடி, சித்தயன்கோட்டை உட்பட 23 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் சுயஉதவி குழு பெண்கள் மூலம் வீடுதோறும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு வளமீட்பு பூங்காவிற்கு (உரக்கிடங்கு) கொண்டு செல்லப்பட்டு அங்கு தரம் பிரித்து மக்கும் குப்பைகளை கொண்டு மண்புழு உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
பேரூராட்சி அலுவலகத்திலிருந்து தங்கள் வார்டு பகுதிக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரிக்க செல்லும் பெண்கள் சராசரியாக 5 முதல் 6 கி.மீ தூரம் வரை தினசரி குப்பை வண்டியை தள்ளிச்செல்கின்றனர். இதனால் ஒருசில நேரங்களில் சோர்வடைந்து 100 சதவீதம் முழுமையாக தெருக்களுக்கு செல்லாமல் திரும்பி விடுகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு பேட்டரி மூலம் இயங்கக்கூடிய ஆட்டோக்களை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படவுள்ளது.
சுமார் 1,80,000 மதிப்பில் வழங்கப்படும் இந்த ஆட்டோக்கள் கோவையில் உள்ள கோயங்கா மோட்டா நிறுவனம் மூலம் பெறப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மணிநேரம் இந்த ஆட்டோவை மின்சாரம் மூலம் ஜார்ஜ் செய்தால் 10கி.மீ தூரம் ஓடக்கூடியது. காலை மாலை இரு நேரங்களில் சுமார் 3மணிநேரம் ஜார்ஜ் செய்தால் போதும் ஒருநாள் முழுவதும் இந்த பேட்டரி மூலம் இயங்கக்கூடிய ஆட்டோக்களை சிரமமின்றி இயக்கலாம்.
தற்போது சின்னாளபட்டி பேரூராட்சி வளாகத்தில் ஆட்டோக்களுக்கு பக்கவாட்டு தடுப்புகள் பொறுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இரா.குருராஜன் கூறுகையில் பேரூராட்சிகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை அதிக அளவில் பெறவும், சிரமமின்றி எளிதாக குறுகிய தெருக்களுக்கும் சென்று வீடுதோறும் தவறாமல் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பெறுவதற்காக பேரூராட்சிகளுக்கு பேட்டரி மூலம் இயங்கக்கூடிய ஆட்டோக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் எரிபொருள் சிக்கனமாவதோடு சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது என்றார். இனி பேரூராட்சிகளில் உள்ள தெருக்களில் பச்சை நிற ஆட்டோக்கள் குப்பையை சேகரிக்க வளம் வரும்.