
ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடையின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து அபராதம் விதிகப்படுவதோடு, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா எச்சரித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில், புகையிலை மற்றும் நிகோடின் கலந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வது, போக்குவரத்து செய்வது, இருப்பு வைப்பது மற்றும் சில்லறை விற்பனை செய்வது போன்ற தடை செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோடின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்தால், உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் கடை மூடப்பட அவசரத் தடையாணை பிறப்பிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவுப்படி, ஈரோடு மாவட்டம் முழுவதும் நியமன அலுவலர் டாக்டர். தங்க விக்னேஷ் மற்றும் 16 பேர் கொண்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல் துறையினர் ரோடு ஒருங்கிணைந்து 5181 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 438 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.24,17,630- மதிப்பிலான சுமார் 2822.33 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.1905 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு குழு மூலமாக அழிக்கப்பட்டது.
எஞ்சியுள்ள புகை பொருட்கள் காவல்துறையின் மூலம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கூலிப் மட்டும் 259 கடைகளில் சுமார் 456.605 கிலோ கண்டறியப்பட்டு (அதன் மதிப்பு சுமார் ரூ.3,72,204) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி, 438 பொருட்கள் விற்பனையாளர்கள் மீது ரூ.69,85,000- அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி 438 கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதில் முதல் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் 306 நபர்களுக்கு தலா ரூ.25,000-ம் அபராதமும், இரண்டாவது முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 நபர்களுக்கு தலா ரூ.50,000-ம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்பொழுது அவர்களின் உணவு பாதுகாப்பு உரிமமானது ரத்து செய்யப்பட்டுள்ளது.