தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார் மயமாக்கி, பொதுத்துறைகளை தனியாருக்குத் தாரைவார்ப்பதைக் கண்டித்து நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதன்படி சங்க கூட்டமைப்பு, அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அலுவலர்களின் கூட்டமைப்பு சார்பில், 15ந் தேதி மற்றும் 16ந் தேதி என இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர்.
இந்நிலையில், 15ந் தேதி முதல் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இரண்டாம் நாளான இன்றும் தொடர்ந்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈட்பட்டனர். இதனால், ஈரோடு மாவட்டத்தில் இருக்கின்ற 217 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் முழுவதுமாகப் பங்கேற்றனர். இதனால் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை சேவைகள் முற்றிலுமாக முடங்கியது. நேற்று ஒரு நாளில் மட்டும் ரூபாய் 600 கோடி ரூபாய் அளவுக்கு ஈரோட்டின் தொழில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
‘மத்திய பா.ஜ.க. மோடி அரசே! பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்காதே!’ எனக் கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்குச் சொந்தமான 360 ஏ.டி.எம்.களில், 12 ஆம் தேதி நிரப்பப்பட்ட பணம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வாடிக்கையாளர்களால் எடுக்கப்பட்டுவிட்டது. இதனால், 15 ந் தேதி காலை முதல் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணம் இல்லாமல் காலியாகி இருந்தது. இதனால், ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க வந்தவர்கள் ஏமாற்றமும், வேதனையும் அடைந்து திரும்பினார்கள். பணம் இருந்த ஒரு சில ஏ.டி.எம் மையங்களில் கூட மக்கள் கூட்டம் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்துச் சென்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.