கரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 968 ஆகவும், உயிரிழப்பு 10ஆகவும் உள்ளது.
இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் இயங்கும் நேரத்தை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே என குறைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கு உத்தரவின்போது, வெளியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததாலும், சமூக இடைவெளியை மக்கள் முறையாக கடைபிடிக்காததாலும் இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தது.
அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கே இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தநிலையில், சென்னையில் நாளை முதல் பேக்கரிகளை திறக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. மேலும் பேக்கரிகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே இயங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.