கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள பரங்கிப்பேட்டையில் இளைஞர்கள் ஒருங்கிணைந்து சமூக ஆர்வலர்கள் அமைப்பு என தொடங்கி, அரசு பள்ளிகளில், கல்வியையும், கட்டமைப்பையும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக பரங்கிப்பேட்டையில் உள்ள கும்மத் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி அனைவரின் பாராட்டை பெற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் வகுப்பறையில் ஹைடெக் எல்சிடி திரையை கொண்டு மாணவர்களுக்கு சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து படக் காட்சிகளுடன் விளக்கப்பட்டது. அதில் நிலங்களை தாரை வார்த்து விட்டு, பிறகு ஊர் மாசாகிறது என்றும் நீர் கேடாகிறது என்றும் புலம்பிக்கொண்டு இருக்கிறோம். வருங்கால சந்ததிக்கு நாம் அறிந்தும், அறியாமலும் ஒரு பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலைமை தொடராமல் இருக்க, இன்றைய கால இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் , சுற்றுச்சூழல் மாசு அடைவதால் ஏற்படும் உபாதைகள், அதனை கையாளும் முறைகள் போன்றவற்றை அறியும் வகையில் பட காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது.
இதனை பள்ளியில் உள்ள மாணவர்கள் கை தட்டி வரவேற்றனர். பரங்கிப்பேட்டையில் அரசு பள்ளிகளில் இளைஞர்கள், இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.