
பொங்கல் திருநாளையொட்டி வருடாவருடம் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெறும்.
பொங்கல் திருநாளன்று அவனியாபுரத்திலும் அதற்கு மறுநாள் பாலமேட்டிலும் அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் குறித்த பதிவு இணையதளத்தில் நடந்தது. சுற்றி இருக்கும் மாவட்டங்களிலிருந்து இளைஞர்கள் போட்டிகளில் பங்கேற்கப் பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் இன்று முதற்கட்டமாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. அவனியாபுரத்தில் இன்று 320 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினார்கள். ஆயிரம் காளைகள் இதில் பாய உள்ளது.
இதில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு குழுவினர் என்பதன் அடிப்படையில் சுழற்சி முறையில் வீரர்கள் களமிறக்கப்படுவர். இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 10 ஆவது சுற்றின் முடிவில் 658 காளைகள் களத்தில் இறக்கப்பட்டன. இதில் 27 காளைகளை அடக்கி ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த விஜய் முதலிடத்தில் உள்ளார். 16 காளைகளை அடக்கி அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 2 ஆவது இடத்திலுள்ளார். 13 காளைகளை அடக்கி மதுரை விளாங்குடியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்க முற்பட்டபோது பல இளைஞர்கள் காயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆவது சுற்றின் முடிவில் இதுவரை 58 இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். ஒருவருக்கு ஒரு ஜல்லிக்கட்டு போட்டி என்ற முறை நடைமுறையில் உள்ளதால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் வீரர்கள் மற்றும் காளைகள் பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.