
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 03.12.2023 முதல் 08.12.2023 வரை, வெவ்வேறு சந்திப்புகளில் நிறுவப்பட்ட ஏஎன்பிஆர் (ANPR) கேமராக்கள் மூலம் மொத்தம் 6,670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழையினைக் கருத்தில் கொண்டு, இந்த ஒரு முறை மட்டும் 03.12.2023 முதல் 08.12.2023 வரையிலான தேதிகளில் நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டும் ரத்து செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.