பணத்துக்குப் பாதுகாப்பு என்று கருதியே மக்கள் வங்கிக்குச் செல்கின்றனர். இந்தநிலையில், மக்களின் பணத்தை வங்கிகள் வைத்திருக்கும் ஏ.டி.எம். மையங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. கொள்ளையர்களால் உடைக்கப்படுவதில் ஆரம்பித்து தீ விபத்து ஏற்படுவது வரை பாதுகாப்பற்ற நிலையில் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன.
இன்று அருப்புக்கோட்டையில் பூட்டியிருந்த எச்.டி.எப்.சி. ஏ.டி.எம். மையம் பற்றி எரிந்தது. ரூ.7 லட்சம் வரையிலும் பணம் இருந்ததாகக் கூறப்படும் அந்த ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கு மின்கசிவே காரணமாக இருக்கும் என்கிறார்கள் காவல்துறையினர். மதுரை – அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எச்.டி.எப்.சி. மையத்தில் தீ விபத்து ஏற்பட்டவுடன், தகவலறிந்து விரைந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
இரவு நேரத்தில் அந்த எச்.டி.எப்.சி. ஏ.டி.எம். மையத்தை பெரும்பாலும் பூட்டிவிடுவது வழக்கமாம். காவலாளி வெளியில் இருந்தபோதுதான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால்தான், மின்கசிவு என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். தீ விபத்து நடந்த ஏ.டி.எம். மையத்தைப் பார்வையிட்டு ஆய்வு நடத்துவதற்கு நாளை சென்னையிலிருந்து அதிகாரிகள் வரவிருக்கின்றனர்.
மின்கசிவால் ஏற்படும் தீ விபத்து குறித்து சற்று விரிவாகவே பேசினார் அந்த மின்பொறியாளர் -
“மின்சார விபத்துகள் திடீரென்று உருவாகிவிடாது. மின்சாரத்தின் பல்வேறு காரணிகள் மூலம் பல்வேறு சமயங்களில் ஏற்பட்ட கூறுகளின் விளைவாகத்தான் திடீரென்று தீ விபத்து ஏற்படுகிறது. மின்சாதனங்களில் கண்ணுக்குத் தெரியாத வகையில் பல்வேறு மின் பயன்பாட்டு குறியீடுகள் மூலம் மட்டுமே அறியக்கூடிய விஷயங்கள் உள்ளன. குறிப்பாக, மின் அழுத்தம், மின் பயன்பாட்டில் வேறுபாடு, மின்கசிவு, மின் அழுத்தத்தில் வேறுபாடு என்றெல்லாம் இருக்கின்றன. இவற்றை, தகுந்த எலக்ட்ரிகல் ஆடிட் மூலம் கண்டறிந்து, விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன் தவிர்த்திட முடியும்.
மின்கசிவு மற்றும் ஷார்ட் சர்க்யூட் மூலம் ஏற்படுகின்ற தீ விபத்துக்களில் தேசிய அளவில் மஹராஷ்டிரா முதல் இடத்திலும் தமிழகம் இரண்டாவது இடத்திலும் இருப்பதாகச் சொல்கிறது ஒரு புள்ளிவிபரம். பரபரப்பாக இயங்கும் இன்றைய காலக்கட்டத்தில், மின்கசிவு மற்றும் ஷார் சர்க்யூட் மூலம் ஏற்படும் தீ விபத்து பற்றிய போதிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை என்றே கருத நேரிடுகிறது.” என்றார் ஆதங்கத்துடன்.
‘சம்சாரம் அது மின்சாரம்’ என்று சினிமாவுக்கு டைட்டில் வைக்கிறோம். ஆனால், மின்சாரம் குறித்த புரிதலின்றி தீ விபத்துக்கள் ஏற்படுவதற்கு நாமும் ஒருவகையில் காரணமாக இருந்துவிடுகிறோம். அதனால், மின்கசிவு விபத்துக்களை தவிர்ப்பதற்கு ஆயத்தமாக இருப்பது அவசியமாகிறது.