ஃபெங்கல் புயல் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதுமே பெருமழையை தந்தது. இந்த மழையால் பல நூறு ஏரிகள் நிரம்பின. இந்த புயலால் பல்லாயிரம் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த நெல், கரும்பு, வாழை பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மாவட்டத்தில் மனித உயிரிழப்பு இல்லை என நினைத்த நிலையில் அந்த கோரத் தகவல் வெளியானது. திருவண்ணாமலை நகரத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீரே தேங்காதது எனச்சொல்லப்பட்டு வந்த நிலையில் மனித தவறுகளால் அது பொய்யானது.
இடைவிடாமல் 40 மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால் திருவண்ணாமலை நகரம் கடற்கரை நகரம்போல் மாறியது. மழைநீர் செல்ல சரியான பாதையில்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள கிராமத்தின் வேங்கிக்கால் ஏரி இந்த மழையின்போதும் நிரம்பி ஓடிப்போன. தண்ணீர் செல்வதற்குச் சரியான கால்வாய் இல்லாததால் தாறுமாறாகச் சென்றது. ஏரியின் எதிர்புறம் இருந்த கலெக்டர் பங்களாவின் காம்பவுண்ட் சுவற்றை கீழே தள்ளிவிட்டு ஆட்சியர் பங்களாவுக்குள்ளும் புகுந்தது. அதேபோல் மாவட்ட விளையாட்டு மையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவரும் மழைநீர் கால்வாய் அருகே அமைத்திருந்தனர். அந்த பாதையும் தூர்த்துப் போனதால் அந்த சுற்றுச்சுவரும் கீழே விழுந்தது. திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் கடல் போல் தத்தளித்தது.
இதேபோல் யாரும் எதிர்பாராத விபத்தும் நடந்து, மக்களை பதைக்கச்செய்துள்ளது. திருவண்ணாமலை மலையடிவாரத்தில் கிழக்கு, வடக்கு பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அடிவாரத்திலிருந்து கால்வாசி மலை வரை மலைமீதிருந்த மரங்களை, பாறைகளை வெட்டிவிட்டு வீடுகள், ஆசிரமங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை வனத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி எதுவும் கண்டுகொள்ளவில்லை. இத்தனை ஆண்டுகளாக தனது கோபத்தைக் காட்டாமல் இருந்த இயற்கை இந்த மழையின்போது காட்டிவிட்டது.
டிசம்பர் 1ஆம் தேதி மாலை 5 மணியளவில் வ.உ.சி நகர் 11வது தெருவில் உள்ள வீடுகளின் மீது மலையின் மேற்கு பகுதியில் சிறிய பகுதி சரிந்தது. சுமார் 40 டன் அளவிலான பாறை உருண்டுவந்து விழுந்ததில் 2 வீடுகளை முற்றிலும் மூடிவிட்டது. அந்த தெரு முழுவதும் 7 அடி உயரத்துக்கு மண் கொண்டுவந்து கொட்டிவிட்டது. மழையாக இருந்ததால் இந்த தகவல் வெளியே தெரியவில்லை. இரவு 7 மணிக்கு மேலே இந்த தகவல் வெளியே தெரிந்தது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுக்குத் தகவல் தெரிவிக்க உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தவர் அங்கிருந்த வீடுகளில் வசித்த 300க்கும் அதிகமான பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றி தற்காலிக முகாம்களுக்கு அனுப்பிவைத்தார். அப்போது பறைகள் விழுந்த வீடுகளில் இருந்த ராஜ்குமார் அவரது மனைவி மீனா, பிள்ளைகள் கௌதம், இனியா, மற்றொரு குடும்பத்தை சேர்ந்த ரம்பா, வினோதினி, மகா என்னவானார்கள் எனத் தெரியவில்லை. அவர்களின் வீடுகள் முழுவதும் மண்ணால் மூடியுள்ளது. இதனால் மீட்பு பணிகளை வேகப்படுத்தியபோது, மாவட்ட வருவாய் பேரிடர், போலிஸ், தீயணைப்புத்துறையினரால் முடியாது என்பது முடிவானதும் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தந்தனர்.
தென்னிந்திய தலைமையமாக அரக்கோணத்தில் உள்ள அந்த படையினர் உதவி கமாண்டோ ஸ்ரீதர் தலைமையில் 35 பேர் இரண்டு மோப்பநாய்களுடன் நள்ளிரவு 1 மணிக்கு களத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபடத்துவங்கினர், மழை, இரவு, இருட்டு போன்றவற்றால் இவர்களுக்கும் மீட்புப் பணி பெரும் சவாலாக இருந்தது. இந்த தகவல் கன்னியாகுமரியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை பணிகள், பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யச்சென்ற மாவட்ட அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தகவல் சொல்லப்பட்டதும் உடனடியாக அதனை ரத்து செய்துவிட்டு திருவண்ணாமலை வந்தார். அமைச்சர் வழியாக இந்த தகவல் முதலமைச்சருக்கு சொல்லப்பட்டதும், உடனடியாக கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் ஆசிர்வாதத்தை அனுப்பி வைத்தார். மேலும், அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தொடர்புகொண்டு மீட்பு பணிகள் குறித்துக் கேட்டபடியே இருந்தார். டிசம்பர் 2 ஆம் தேதி காலையும் மீட்பு பணியில் தேசிய மீட்பு படையினர், மாநில மீட்பு படையினர், போலீசார் என 120 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த வீடுகளில் இருந்தவர்களின் நிலை என்ன என்பது மீட்புப் பணி முடிந்தபின்பே உண்மைத் தன்மை தெரியவரும்.
மீட்புப் பணியின் போது ஏற்கனவே பாறை, மண் சரிந்த இடத்துக்கு அருகிலேயே மற்றொரு இடத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி காலை மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட்ட இடங்களை அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரை போன்றோர் நேரில் பார்வையிட்டு மீட்புப் பணிகளை வேகப்படுத்தினர். பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினர்.
மலைச்சரிவில் வீட்டுக்குள் சிக்கியதாக கூறப்படும் இரண்டு பெரியவர்கள், 5 குழந்தைகள் என ஏழு பேரின் நிலை என்னானது எனத்தெரியாமல் அவர்களின் உறவினர்கள், அப்பகுதி மக்கள் கவலையிலும், கண்ணீரோடும் உள்ளனர்.
படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்