தமிழகத்தின் பிரபலமான கோயிலாக 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரியூர் தங்ககோவில் விளங்கிவருகிறது. தினமும் 25 ஆயிரம் பக்தர்களுக்கு குறையாமல் இங்கு வருகின்றனர். இதனால் இந்த கோயிலுக்கு செல்லும் பாதைகள் எப்போதும் பரபரப்பாக இருக்கும். அதில் முக்கியமான பாதை வேலூர் டூ அணைக்கட்டு பாலம்.
வேலூரில் இருந்து அணைக்கட்டு செல்லும் வழியில் உள்ளது இந்த கோயில். இந்த பாதையின் குறுக்கே விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வழியாக செல்லும் ரயில்பாதை செல்கிறது. இந்த பாதை தினமும் 5 முறைக்கு மேல் மூடப்படுகிறது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய மேம்பாலம் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றுவருவதால் அந்த பாதை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் வேலூரில் இருந்து பயணிகள் அரியூர் உட்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்ல, வர 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு வருகின்றனர். இதனால் அனைத்து தரப்பினரும் வேதனையுடன் இருந்து வந்தனர்.
இதுப்பற்றி பாதிக்கப்படும் கிராம மக்கள் தங்களது தொகுதி எம்.எல்.ஏவான அணைகட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், திமுக மத்திய மா.செவுமான நந்தகுமாரிடம் முறையிட்டனர். அவர் இதுப்பற்றி இரயில்வே துறையினருடன் பேசி, அவர்கள் இடத்தில் இருப்பு பாதையை க்ராஸ் செய்து செல்ல வழி ஏற்படுத்தி தாருங்கள் என வேண்டுக்கோள் வைத்தார். அவர்கள் தங்கள் துறை உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டு அருகிலேயே தற்காலிக பாதையை உருவாக்கி தந்தள்ளனர். அந்த பாதையை இன்று பிப்ரவரி 9ந்தேதி திறந்துவைத்தார் நந்தகுமார். பொதுமக்கள் இனிப்பு தந்து மகிழச்சியை கொண்டாடினர்.