Skip to main content

’’கரண்ட் கம்மியா வருது.... ஆனா பில் எக்கச்சக்கமாக வருது...’’-மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு செந்துறை நுகர்வோவின் ஆதங்க கடிதம்!!!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கடும் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. கோடைகாலம் என்பதாலும், ஊரடங்கினாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் மக்கள் இந்த மின்சார பிரச்சனையினால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

 

ப்

 

இந்நிலையில், தமிழ்நாடு மின்பகிர்மானத்துறை செயலாளருக்கும்,  மின்சாரத்துறை அதிகாரிகளுக்கும் ஒரு நுகர்வோர் எழுதியுள்ள  கடிதம்,:    

’’எங்கள் அரியலுார் மாவட்டம், செந்துறை வட்டத்தில் பகலில் மின்சாரம் 120 வோல்ட் முதல் 160 வோல்ட் வரை வருகிறது. எங்கள் வீட்டில் மின்விசிறி மிகவும் குறைவான வேகத்திலேயே சுற்றுகிறது. உங்கள் துறையில் பணிபுரியும் சில நண்பர்களிடம் விசாரித்ததில் கோடைகாலம் அப்படித்தான் இருக்கும் என்றனர். தற்சமயம் நாட்டில் எந்தவித தொழிற்சாலையும் இயங்கவில்லை, அதிகமாக நுகர்வு செய்யும் வணிக நிறுவனங்களும் செயல்படவில்லை. அப்படியிருக்கையில், எங்கள் பகுதி மட்டும் - அநேகமாக தமிழ்நாடு முழுவதும் - ஏன் மின்சாரம் குறைவாக வழங்குகிறீர்கள்? 

சரி இரவுதான் முழு மின்சாரமும் வருகிறதே என்ற மனநிறைவுடன் சென்றால், பகலில் இருந்த நிலைமையை விட மோசமாக இருக்கிறது.  

தற்போது மணி 1.10 இரவு வெளியில் சென்றால் எனது பக்கத்து வீட்டுக்காரர்கள். மேலும் அனைத்து வீட்டினரும் வெளியில்தான் உட்கார்ந்து இருக்கின்றனர். என்ன உங்க வீட்டிலும் ஃபேன் ஓடவில்லையா என்று கேட்கின்றனர். 
 

nakkheeran app



நம்ம மின்சாரத்துறைக்கு என்னாச்சு.... கரண்ட் கம்மியா வருது.... ஆனா பில் எக்கச்சக்கமாக வருது... அதை கேட்டாலும் ஆபிஸில் மனு கொடுங்க... மீட்டர் ஏதாவது பிரச்சனை இருக்கும்கிறாங்க. ஆனால், அந்த பில்லை கட்டித்தான் ஆகனும்கிறாங்க.

இப்பத்தான் யோசிக்க தோணுது... கவர்மெண்ட் நடத்துற மாதிரி... பிரைவேட்டா நிறைய கம்பெனி கரண்ட் தயாரிக்கிற வியாபாரம் பண்ண கொடுத்தா நாம எந்த கம்பெனினாலும் தேர்ந்தெடுக்காலாம்ல. உங்க பணிகள்ல நீங்க படுற கஷ்டம் அனைவருக்கும் தெரியும். ஆனா நான் சின்ன வயசுலேர்ந்து பார்க்கிற லோ கரண்ட் பிரச்சினை எப்பதான் தீரும்... 

ஒவ்வொரு துறையும் ஒரு சின்ன மொபைல் அப்ளிகேஷனில் அனைத்தையும் கொண்டு வருகிறார்கள். மின்துறை அப்ளிகேஷன்ல பில் கட்டிட்டாலே அதே பெரிய இமாலய வெற்றிதான். எங்கே தவறு நடக்கிறது என்று கண்டுபிடியுங்கள். ஊரடங்கு காலத்திலேயே மின்சாரம் இப்படி வருகிறது என்றால், வழக்கமான கோடை காலத்தில் 100 வோல்ட் மின்சாரம் வந்தாலும் வரும்போல...

எங்கள் குடும்பம் மட்டுமல்ல. இந்த பகுதி மக்களே நடுநிசியில் கண்விழித்து வெளியில் உட்கார்ந்துள்ளனர். எனது 6 வயது மகனை செல்போன் கொடுத்து ஆசுவாசப்படுத்தியுள்ளேன். 

அய்யா இந்த மனுவை பரிசீலனை செய்யுங்கள்... உடனே எப்படி வாட்சப்பில் போடலாம்... குறை கூறலாம் என்று அதிகாரி அடுத்த நாள் கேட்பார். அவர்களுக்கும் குடும்பம் உள்ளதுதானே... அவர்களும் இரவு துாங்கியிருக்கமாட்டார்கள்.... எல்லா மாவட்ட தலைநகரில் முழு மின்சாரமும் வருகிறது.  

ஏனெனில் அங்கு மாவட்ட ஆட்சியர், நீதிபதி, காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு இருக்கிறது.  அவர்கள் மட்டும் மனிதர்கள்.... கடைக்கோடி கிராமத்தில் உள்ளவனின் நிலைமை....

எங்கள் வட்டார தலைமையகத்தின் நிலைமையே இப்படி உள்ளதே. உள்கிராமங்களில் நிலைமை எப்படி உள்ளது எனத் தெரியவில்லை.  தயவுசெய்து குறைகளை சரிசெய்து மின்சாரத்துறையை தன்னிறைவு அடைய செய்யுங்கள். லோ கரண்ட் மற்றும் கோடைகால மின் பிரச்சனை இந்த இருவார்த்தைகளையும் அகராதியில் இருந்து எடுத்துவிடுங்கள்...

இப்படிக்கு, இரவு 1.40 மணிக்கு துாக்கம் வராமல் யோசித்து யோசித்து எழுதும் மின் நுகர்வோன்.

 

 

சார்ந்த செய்திகள்