அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடக்கரையோரம் அமைந்துள்ள கிராமம் திருமானூர். இந்தப் பகுதியில் பலர் வேலையில்லாமலும், பணப் புழக்கம் இல்லாமலும் பசியால் வாடியதைக் கண்டு தூக்கம் வராமல் அவதியுற்று பின்னர் பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து வெற்றிகரமாக 5 நாட்களில் 1,000 பேருக்கு உணவளித்து வருகிறார் 62 வயது நிரம்பிய சமூக ஆர்வலர் மு.வரதராஜன்.
கரோனாவால் மக்கள் உணவின்றி தவித்து வருவதை அறிந்த மு.வரதராஜன், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களைச் சந்தித்து பொதுமக்களுக்கு உணவளிக்க அனுமதி வேண்டி விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தினை பெற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும் இந்தச் சேவையைச் செய்ய பல்வேறு தடைகள் இருந்தது. தடையை மீறி திருமானூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் செந்தில்குமாரிடம் தகவல் தெரிவித்து விட்டு, பல்வேறு மன உளைச்சலுக்கு இடையில் ஊரடங்கு முடியும் வரை ஏழைகள் பசியாற உணவு அளிக்க பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கிடையில் கடந்த 5 நாட்களாக உணவு வழங்கி வருகிறார்.
இந்தச் சேவை தொடர தொடர்ந்து பல்வேறு நண்பர்கள் உதவி செய்து வருகின்றனர். இதில் திருமானூர் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் 2 மூட்டை அரிசி தந்து ஊக்கப்படுத்தி உள்ளார். ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் ஒருவரும் உதவி செய்துள்ளார். தனது வருமானமே கேள்விக்குறியான நிலையிலும் சோதிடர் ஒருவர் மிக ஆர்வமாக உதவி புரிந்து வருகிறார். இப்படி 62 வயதிலும் பலரையும் ஒருங்கிணைத்து உணவு வழங்கி வரும் சமூக ஆர்வலரின் செயல் பாராட்டுக்குரியது எனப் பலரும் பாராட்டுகின்றனர்.
இவரது செயலைப் போற்றும் விதமாகப் பெயர் சொல்ல விரும்பாத காவலர் ஒருவர், ரூபாய் 2 ஆயிரம் கொடுத்து அன்னதானத் திட்டத்தைச் சிறப்பாக நடத்துமாறு கூறியுள்ளார்.
சமூக ஆர்வலர் வரதராஜன் நம்மிடம், ஊர் கூடித் தேர் இழுத்தால் தான் கரோனாவால் பசியால் வாடும் பலரையும் காப்பாற்ற முடியும். எனக்கு மனமிருக்கு. எப்படியோ தொடர்ந்து மக்களுக்கு உணவளிப்போம் என்கிறார்.
ஏதோ இது போல சில உள்ளங்கள் இருப்பதால்தான் அவ்வப்போது மழை பெய்கிறது என்று உணவை வாங்கிப் பசியாறும் மக்கள் வாயாற வாழ்த்துவதைக் காதாற கேட்க முடிகிறது.