அரியலூர் மாவட்டம் தமிழகத்திலேயே சிறுதானியங்கள் உற்பத்தியில் பெயர் பெற்ற மாவட்டமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் திகழ்ந்தது. ஆனால் தற்போது படிப்படியாக சிமெண்ட் ஆலைகள் வருகைக்கு பின்னர் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு நாளுக்கு நாள் சிறுதானியங்கள் உற்பத்தி கேள்விக்குறியாகி வருகிறது. கம்பு, கடலை, எள், சோளம், துவரை, மொச்சை, அவரை, தட்டைப்பயறு, பாசிப்பயறு, நரிப்பயறு, கொள்ளு, வரகு, கேழ்வரகு, மேட்டுநில நெல், சாமை, மிளகாய், மல்லி உள்ளிட்ட சிறுதானியங்கள் உற்பத்தியான மாவட்டத்தில் இன்று சிறுதானியங்கள் உற்பத்தி இல்லாமல் போய் விட்டது.
மேட்டு நிலங்களில் மானாவாரியாக மழையைக் கொண்டு வளருகின்ற சிறுதானியங்களை மீண்டும் உற்பத்தி செய்ய அரியலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரியலூர் மாவட்ட சிறுதானியங்கள் என்றாலே தரமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் டெல்டா மாவட்ட மக்கள் விரும்பி வாங்கி செல்வர்.
எனவே மேட்டு நிலங்களில் சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுதானியங்கள் உற்பத்தி பெருகும்போது நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கேற்ப அரியலூர் மாவட்ட மக்கள் நோயின்றி நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ வழிவகை கிடைக்கும்.
மேலும் சிறுதானியங்களால் சிட்டுக்குருவிகளுக்கு மற்றும் தேன் சிட்டு, கவுதாரி, மைனா, நாரை, கொக்கு, மரங்கொத்தி, கழுகு, கிளி, கீரி உள்ளிட்ட பறவையினங்களுக்கு உணவாகும். பல்லுயிர்ப் பெருக்கம் நிகழும். எனவே மீண்டும் அரியலூர் மாவட்டம் சிறுதானியங்களின் கோட்டையாக மிளிர உதவி செய்ய வேண்டிய கடமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா அவர்களுக்கு இருக்கிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.