Skip to main content

இதையும் தாங்க ஏது தலைவா எமக்கு இதயம்? -ஸ்டாலின்

Published on 10/08/2018 | Edited on 10/08/2018
stalin

 

என் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் என்று திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்:


 ‘’ இன்று ஆகஸ்ட் 10 - தலைவர் கலைஞர்  அவர்களின் சாதனை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும் நாள்களில் ஒன்று. அவரது முதல் பிள்ளையான ‘முரசொல’ இதழ்  பிறந்த  நாள்!

தலைவர் கலைஞர் 17 வயதில் ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்து இதழை நடத்தினார். அதன் அடுத்த கட்டமாக ‘முரசொலி’யைத் துண்டு வெளியீடாக முதன்முதலில் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் நாள் தான் வெளியிட்டார்.  76 ஆண்டுகள் அவரால் வளர்க்கப்பட்ட பிள்ளை இன்னமும் தமிழர்களுக்காக முரசறைந்து வருகிறது; தொண்டர்களைத் தட்டி எழுப்பி வருகிறது. காலையில் ‘முரசொலி’ படிக்காவிட்டால் கை நடுங்கும் என்ற அளவுக்கு கழகத் தோழர்களின் உதிரத்தோடு கலந்துவிட்டது. எதிரிகளுக்கோ எப்போதும் சிம்ம சொப்பனமாகவே இருந்தது.

யாரைத் தாங்கும், யாரைத் தாக்கும் என எதிரிகள் பயந்து கொண்டே தினமும் ‘முரசொலி’யைத் திருப்புவார்கள். கழகத்துக்கு வாளும், கேடயமுமாய் ‘முரசொலி’யை வார்ப்பித்துக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார் தலைவர் கலைஞர். தந்தையை இழந்து நான் நிற்பதைப் போலவே ‘முரசொலி’ என்ற மூத்த மகனும் தந்தையை இழந்து நிற்கிறான். காகிதக் கண்ணீர் வடித்து நிற்கிறது ‘முரசொலி’.

இப்படி ஒரு தலைவன் எந்த இயக்கத்துக்கும் வாய்த்தது இல்லை என்று நாம் பெருமையால் திளைக்கும் அளவுக்கு வாழ்ந்தவர் அவர். இப்படிப்பட்ட தொண்டர்கள் எந்தத் தலைவருக்கும் கிடைத்தது இல்லை என்கிற அளவுக்குச் செயல்பட்டவர்கள் நீங்கள். தலைவன் - தொண்டன் என்ற பாகுபாடுகூட இல்லாமல் தந்தை - தனயானாய்த் தான் அனைவரையும் அன்பால் அரவணைத்தார். அதனால்தான், ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே!’ என்ற ஒற்றைச் சொல்லைக் கேட்டதும் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர்களாய் நாம் மயங்கி நின்றோம்.

எந்தக் குரலைக் கேட்டால் நமது நாடி, நரம்பு, எலும்பு, இரத்தம் எல்லாம் புத்துணர்வு பெறுமோ அந்தக் குரலை இனி கேட்க முடியாது!

சுருள்முடி நெற்றியில் விழ, கறுப்புக் கண்ணாடி ஒளிக்கீற்றாய் பட்டுத் தெறிக்க, மஞ்சள் சால்வை கொடி போல் நம்மை வரவேற்று, முத்துப்பல் மொத்தமும் தெரிய வெடிச் சிரிப்பால் குரல் எழுப்பி, இருவண்ணக் கொடி தாங்கிய மோதிரக் கையால் முழுக்கைச் சட்டை லேசாக மடக்கித் தெரிய - நமக்குக் காட்சி தந்த கழகத்தின் பேராசானை இனி பார்க்க முடியாது!

என்ன செய்ய வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும், எம்மாதிரி முடிவெடுக்க வேண்டும், எவ்வழி நல்வழி என்றெல்லாம் நாளும் பொழுதும் நமக்கு வழிகாட்டிய கலங்கரை விளக்குத் தூண் சாய்ந்துவிட்டது.

நமக்கு வாளும் கேடயமுமாய் அவர் இருக்கிறார் என்ற ‘தைரியத்தில்’ இதுவரை நாம் இருந்தோம். அந்த தைரியம், நம்மைத் தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டது! வெயிலில் வெந்து, மழையில் நனைந்து பல மணி நேரம் உங்கள் ஊரில் அவருக்காகக் காத்திருந்தீர்கள். இனி அவர் உங்கள் ஊருக்கு வரமாட்டார்!

‘நாளைய முரசொலியில் நமக்கு எழுதும் கடிதத்தில் நம் தலைவர் என்ன எழுதியிருப்பார்?’ என்று காதல் கடிதத்துக்கு ஏங்கியிருந்தது போல இருந்திருப்போம். இனி அவர் கடிதம் படிக்க முடியாது!

ஆனாலும் அவர், இன்னும் நூற்றாண்டுகள் வாழ்ந்தாலும் எவ்வளவு மணிநேரம் பேச வேண்டுமோ அவ்வளவு பேசி விட்டார்.

இன்னும் நூற்றாண்டுகள் வாழ்ந்தாலும் எத்தனை பக்கம் எழுத வேண்டுமோ அவ்வளவு பக்கங்களை எழுதி விட்டார். அவர் எழுத்து, பேச்சும்தான் நமது கட்சி சாசனம்!

"என் பொதுவாழ்வுப் பயணத்தில் இடர், துடர், இன்பம், துன்பம், எதிர்ப்பு, ஆதரவு, ஏச்சு, பேச்சு, இழிவு, பழி என எத்தனையோ விதவிதமான நிகழ்வுகளை எதிர்கொள்ளும் போது என்னை ஆளாக்கிய பெரியாரையும், அரவணைத்து வழிநடத்திய அண்ணாவையும் நினைத்துக் கொண்டு இலட்சியத்தில் இம்மியளவும் சறுக்கல் இல்லாமல் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டிருக்கிறேன்" என்று தலைவர் கலைஞர் எழுதினார். நமது பொது வாழ்வுப் பயணத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் - ஆகிய மூன்று மாபெரும் சக்திகள் நம்மை வழிநடத்தும்.

"வரவேற்காமல் வரக்கூடிய நோய், தடுத்தாலும் கேளாமல் தழுவக்கூடிய சாவு, இவற்றுக்கு மத்தியில் மனத்தூய்மையுடனும், உறுதியுடனும் ஆற்றுகின்ற செயல்கள்தான் நிலைத்து வாழக்கூடியவை" என்று தலைவர் சொன்னார். தலைவர் நம்மை விட்டுச் சென்றிருக்கலாம். ஆனால், அவர் செய்த செயல்கள், நிலைத்து வாழக் கூடியவை. தமிழ்நாட்டு மக்களை வாழவைக்கக் கூடியவை. அவர் காட்டிய வழியில், அவர் காட்டிய பாதையில் நமது பயணம் தொடரும். இதுவரை நம்மை உடலால் இயக்கியவர், இனி உணர்வால் இயக்குவார்.

அவர் இல்லை என்பதை என்னால் தாங்கிக் கொள்ள இயலாது. “இதையும் தாங்க ஏது தலைவா எமக்கு இதயம்?” என்று கேட்கத் தோன்றுகிறது.

உங்களில் ஒருவனான நான், ஏதோ ஒன்றை அல்ல… எல்லாவற்றையும் இழந்த மனநிலையில் இருக்கிறேன். அவர் கருவால் உருவானவன் நான். அவரது கதகதப்பில் தவழ்ந்தவன். அவரால் நடை பழகியவன். உடை அணிவிக்கப்பட்டவன். அவரால் அழைத்துச் செல்லப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டவன். போராளியும், சோவியத் கட்டமைப்பை உருவாக்கியவருமான ஸ்டாலின் அவர்களின் பெயரை எனக்குச் சூட்டியவர் அவர். அவசரநிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டு, தி.மு.க.வின் ஆட்சி கலைக்கப்பட்டபோது காவல்துறை என்னைக் கைது செய்ய வந்தபோது, கம்பீரத்தோடு என்னை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்த நெஞ்சுரத்தைப் பார்த்து வளர்ந்தவன் நான். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் என்னை வார்ப்பித்தார். வளர்த்தெடுத்தார். "ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு" என்று மும்முறை அவர் சொன்னதுதான் எனக்குக் கிடைத்த மாபெரும் பாராட்டுப் பட்டயம்.

‘உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ என்ற அந்த மூன்று வார்த்தைகள்தான் எனக்கு அவர் விட்டுச் சென்ற மந்திரச் சொற்கள். மூன்று வேளையும் என்னை இயக்கப் போகும் சாவி அதுதான். அந்த உழைப்பு, திராவிட இயக்கத்தின் இலட்சியங்களை வென்றுகாட்டும். அந்த உழைப்பு, தமிழ்நாட்டுக்கான உரிமைகளைப் பெற்றுத்தரும். அந்த உழைப்பு, தலைவர் கலைஞரின் எல்லாக் கனவுகளையும் நிறைவேற்றும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சோப லட்சம் தொண்டர்கள் துணையோடு இதை சாதித்துக் காட்டுவேன் என்று சபதம் ஏற்கிறேன்.

‘ஏடு’தான் கட்சியை வளர்க்கும். ‘கட்சி’தான் ஏட்டையும் வளர்க்கும். பல நூறு இதழ்களால் வளர்க்கப்பட்டது திராவிட இயக்கம். இதனைக் கழகத் தோழர்கள் மறந்து விடக்கூடாது. கழக உடன்பிறப்புகளுக்கு ‘முரசொலி’ வாசிப்பது மூச்சு விடுவது போன்று இயல்பானதாக மாறினால்தான் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளை ஆரோக்கியமாக இருப்பான். ‘முரசொலி’யை வளர்ப்பது என்பது தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையை வளர்ப்பது போல் என்று நினைத்து வளர்த்தெடுக்க வேண்டும். முரசொலி, தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளை என்றால் எனக்கு ‘மூத்த அண்ணன்’.

தலைவர் என்ன நினைக்கிறார் என்று நேரில் பார்த்து தெரிந்து கொள்வதைவிட முரசொலியைப் பார்த்து தெரிந்து கொள்வதே அதிகம். அவர் இல்லாத சூழ்நிலையில் நித்தமும் வெளிவரும் முரசொலியைக் காலையில் பார்க்கும் போதும் கலைஞரின் முகம்தான் நினைவுக்கு வரும். கலைஞர் நம்மோடு இருக்கிறார், எங்கும் போய்விடவில்லை என்பதை நித்தம் உணர்த்தும் ‘முரசொலி’யை வாழ்த்துகிறேன். வாழ்த்துங்கள்!’’

சார்ந்த செய்திகள்