Skip to main content

'தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லையா?'- பாமக ராமதாஸ் ஆதங்கம்

Published on 30/03/2025 | Edited on 30/03/2025
'Are there no jobs for Tamil-educated people?' - PMK's Ramadoss worries

'தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லையா? அரசு பள்ளிகளில் தமிழ் கற்பிக்க தமிழாசிரியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்' என பா.ம.க.  நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில்  தமிழை முதன்மைப் பாடமாகத் தேர்வு செய்து  பட்டப்படிப்பு (பி.ஏ), பட்ட மேற்படிப்பு (எம்.ஏ),  இளம் முனைவர்(எம்.பில்), முனைவர் (பி.எச்டி) படிப்புகளையும், அவற்றுடன் கல்வியியல் (பி.எட்) பட்டமும் பெற்ற  50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்  வேலைவாய்ப்பின்றியும்,  தகுதிக்கு குறைவான பணிகளை பார்த்துக் கொண்டும்  அவதிப்பட்டு வருகின்றனர்.  பலர் பட்டம் பெற்று 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அவர்களின் அவல நிலைக்கு தமிழக அரசு கடைபிடித்து வரும் அன்னைத் தமிழுக்கு எதிரான கொள்கைகள் தான் காரணம் ஆகும்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப்பாடமாக கற்பிக்கப்படுகிறது. ஆனால், எட்டாம் வகுப்பு வரை தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்க தமிழாசிரியர் பணியிடங்கள் தனியாக ஏற்படுத்தப்படவில்லை. தனியார் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ள போதிலும், அவற்றில் அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால் தனியார் பள்ளிகளிலும் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் தமிழாசிரியர்களுக்கு வேலை கிடைக்காததற்கு இது தான் காரணம் ஆகும்.

தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வரலாறு பயின்ற ஆசிரியர்களால் ஆங்கிலப் பாடத்தை நடத்த முடியும்; கணிதம் படித்த ஆசிரியர்களால் அறிவியல் பாடத்தையும், அறிவியல் படித்த ஆசிரியர்களால் கணிதத்தையும் கற்பிக்க முடியும். ஆனால், தமிழ்ப் பாடத்தை தமிழ்ப் படித்தவர்களால்  தான் தெளிவாக நடத்த முடியும்.  இதை தமிழறிஞர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் தமிழகத்தை ஆளும் அரசுகள் செவிமடுக்க மறுக்கின்றன.  இது தமிழுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்.

தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்க தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படாததால் தமிழ்ப் படித்த ஆசிரியர்கள் மிகக் குறைந்த  ஊதியத்தில் அவர்கள் படித்த படிப்புக்கு சற்றும் பொருத்தம் இல்லாத பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தமிழை வளர்ப்பது தான் தலையாயக் கடமை என்று கூறும் ஆட்சியாளர்கள், தமிழ்ப் படித்தவர்களுக்கு வேலை வழங்க மறுப்பது பெரும் முரண் ஆகும்.

அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் போலவே தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் தனியாக தமிழாசிரியர் பணியிடங்களை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்;  தனியார் பள்ளிகளிலும் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கும் அரசு மூலம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தில்  தமிழாசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்; தமிழ்ப் படித்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலையின்றி வாடும் தமிழாசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்