
19 மத நகரங்களில் இன்று முதல் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்தியப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 24ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள 19 மத நகரங்களில் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்திருந்தார்.
மோகன் யாதவ்வின் இந்த முடிவை, மாநில அமைச்சரவைக் கூட்டம் அங்கீகரித்தது. அதன்படி, இன்று (01-04-25) முதல் மாநிலத்தின் 19 புனித நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் மதுபானம் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதில் உஜ்ஜைன், ஓம்காரேஷ்வர், மகேஷ்வர், மண்டலேஷ்வர், ஓர்ச்சா, மைஹார், சித்ரகூட், டாடியா, பன்னா, மாண்ட்லா, முல்டாய், மண்ட்சௌர் மற்றும் அமர்கண்டக் ஆகிய 13 நகரங்களிலும் சல்கான்பூர், குண்டல்பூர், பண்டக்பூர், பர்மங்கலன், பர்மன்குர்த், லிங்கா ஆகிய கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கும் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ம.பி முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளதாவது, “போதைப் பழக்கத்தை ஒழிப்பதற்காக மாநில அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை, 19 நகர்புறங்கள், பொது மற்றும் மத நம்பிக்கை கொண்ட கிராம பஞ்சாயத்துகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.