அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. திமுக சார்பில் ஜெகத்ரட்சகனும், பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தியும் போட்டி போடுகின்றனர். இதனால் பாமக நிர்வாகிகள் கார் மூலமாக தொகுதியை வலம் வந்தனர்.
ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்விசாரம் பகுதியில் இந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றிருந்த வாக்கு மையத்தை பார்வையிட பாமக முன்னாள் மத்திய ரயில்வே துறை அமைச்சர் வேலு, முன்னாள் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் இளவழகன் காரில் வந்தனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி, காரை நிறுத்தி காரை 100 மீட்டருக்கு வெளியே இருக்க வேண்டும் என்று கூறியதால் அங்கிருந்து தொண்டர்கள் ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்தனர். இந்த வாக்குவாதம் மேலும் முற்றியதால் அதிக அளவில் தொண்டர்கள் கூட்டம் கூடியதால் கூட்டத்தைக் கலைக்க அங்கிருந்த சி. ஆர். பி. எஃப் துணை ராணுவ வீரர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு செய்தார்.
அதனால் அங்கிருந்த தொண்டர்கள் பயந்து ஓடினர். துப்பாக்கி சூடு செய்த பிறகு ஏன் துப்பாக்கி சூடு செய்தாய்?, இங்க என்ன கலவரமா நடந்தது என்று துணை ராணுவத்தோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பாமக நிர்வாகிகள்.
இந்த தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பர்வேஷ்குமார், ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் கூட்டத்தை கலைக்கவே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அப்படி நடத்தவில்லையென்றால் பூத்தை கைப்பற்றியிருப்பார்கள் என்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இதனால் அந்த வாக்குசாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.