Skip to main content

காவல்துறையினருக்கு பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு!

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
Announcement of Pongal medals for the police

தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு காவல் துறையில் பாணியாற்றும் காவலர், காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு‘தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்’ வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 119 அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் நிலைகளில் 59 பேர்களுக்கும் தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த பதக்கங்கள் பெறுபவர்களுக்கு பதவி நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400 ரூபாய் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும். மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபர்கள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இப்பதக்கங்கள் பெறும் 3184 தமிழ்நாடு காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்