Skip to main content

விடிய விடிய போராட்டம்... கண்டுகொள்ளப்படுமா மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை?

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

Anganwadi workers and physically challenged  struggles on endless

 

தமிழகம் முழுக்க அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களது கோரிக்கைகளான, “அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு ரூபாய் 10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூபாய்.5 லட்சம் வழங்க வேண்டும். பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு உள்ளூர் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். 3 வருடப் பணி முடித்த மினி மைய ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 10 வருடப் பணி முடித்த உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்” உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 22ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய அளவில் அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

 

அதன்படி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலகத்தில், சென்ற 22ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தை நடத்துகிறார்கள். மாவட்டத்தில் இருந்து  500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பெண் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் போராட்டம் இன்று 25 ந் தேதி  4-வது நாளாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. நேரம் செல்ல செல்ல பல்வேறு பகுதியில் இருந்தும் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர்ந்து தாலுகா அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்குப் போராட்டக் களத்திலேயே உணவு வழங்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதைப் போன்று ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையாக மாதம் ரூபாய் 3 ஆயிரமாகவும், கடும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். தனியார்த் துறைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத வேலைவாய்ப்பை உத்தரவாதம் செய்யவேண்டும் உள்பட கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இரவு கடும் பணியையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய குடியேறும் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். தமிழகம் முழுக்க இவர்களின் போராட்டங்கள் நீடித்து வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்