Skip to main content

போபால் விஷ வாயுக் கசிவை நினைவுபடுத்தும் விசாகப்பட்டிணம் கோரச் சம்பவம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

 jawahirullah


விசாகபட்டிணத்தில் நேற்று ஏற்பட்ட விசவாயுக் கசிவால் 13 பேர் பலியான சம்பவம் போபால் விஷ வாயுக் கசிவை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது. இதற்குக் காரணமான எல்ஜி நிறுவனத்திற்குக் கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் அருகே ஆர்.ஆர்.வேங்கட புரம் கிராமத்தில் உள்ள  தென் கொரியாவிற்குச் சொந்தமான எல்ஜியின் பாலிமர் ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விசவாயுக் கசிவால் அக்கிராமத்தில் வசித்த 13 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
 

1984 இல் போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தினால் ஏற்பட்ட விஷ வாயு கோர விபத்தை இது நினைவூட்டுகிறது. ஒரு குழந்தை உட்பட 13 பேர் மரணமடைந்ததற்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த விஷவாயு தாக்கத்தால் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு தலா 1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
 

1984 இல் போபால் விஷ வாயுக் கசிவினால் பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரம் வாழ்வாதாரமும் அழிவதற்கு காரணமான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினார். 35 ஆண்டுகளுக்குப் பிறகு விசாகபட்டிணத்தில்  தென்கொரியா நிறுவனம் ஒன்றில் நடைபெற்றிருக்கும் இந்த விபத்திற்குக் காரணமானவர்களில் எவரும் சட்டத்தின் பிடிபியலிருந்து தப்பி விட அனுமதிக்கக் கூடாது. 
 

ஊரடங்கு அமலில் இருக்கும் போது மூடப்பட்டுள்ள தொழிற்சாலையில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென்றும் இதற்குக் காரணமான எல்ஜி நிறுவனத்திற்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆந்திர அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


நாடு முழுவதும் இயங்கும் ரசாயனத் தொழிற்சாலைகளின் பாதுகாப்பு அம்சங்கள் போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டுத் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்