வன்கொடுமைத் தடுப்புச் சட்ட திருத்த மசோதா நிறைவேறியது! தமிழக அரசு சிறப்பு நீதிமன்றங்களை உடனே அமைக்க வேண்டும்! என்று
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்த அவரது அறிக்கை: ’’உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை மீண்டும் பழைய நிலையிலேயே தொடர வகை செய்யும் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காகப் போராடிய இயக்கங்களுக்கும் ஆதரவளித்த அரசியல் கட்சிகளுக்கும் உச்சநீதிமன்ற வழக்கில் தம்மையும் இணைத்துக் கொண்ட கேரள, தமிழக அரசுகளுக்கும் எமது நன்றியை உரித்தாக்குகிறோம். இந்த சட்டத்தின்படி எல்லா மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் தீர்ப்பை நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு அளித்தவுடன் அதற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்தியது. காங்கிரஸ் தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்கள் நேரடியாக களம் இறங்கிப் போராடினார். பல்வேறு தலித் இயக்கங்களின் சார்பில் இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு நாடே ஸ்தம்பித்தது. அந்த நேரத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் சாதிவெறியர்களும் காவல்துறையினரும் கூட்டு சேர்ந்து நடத்திய தாக்குதலில் தலித்துகள் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். பொய் வழக்குகளில் தலித்துகளும் தலித் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர். தொடர்ச்சியாக தலித் இயக்கங்களும் காங்கிரஸ் இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே பாஜக அரசு பணியவேண்டிய நிலை ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க திமுக தலைமையில் 9 கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் தலித் இயக்கங்களை ஒருங்கிணைத்து கண்டனப் பேரணி ஒன்றையும் நடத்தினோம். மார்க்சிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய இரயில் மறியல் போராட்டத்தை நடத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழுவின் சார்பில் டெல்லியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தருணத்தில் தலித்துகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் போராடிய கட்சிகள் அனைத்துக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது. இந்த சட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் சிறப்பு நீதிமன்றங்களை முறையாக தமிழக அரசு இன்னும் அமைக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் கூட தமிழக அரசு அதை நிறைவேற்றாமல் உள்ளது வேதனையளிக்கிறது. எனவே, சிறப்பு நீதிமன்றங்களை விரைந்து அமைத்திட வேண்டுமாய்த் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.’’