Skip to main content

‘அதிமுகவை அடுத்த தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்’ - ஜெ. நினைவிடத்தில் எடப்பாடி அணி உறுதிமொழி ஏற்பு

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் அவரது நினைவிடம் உள்ள மெரினாவில் குவிந்து வருகின்றனர். தற்பொழுது ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி எனப் பிரிந்து கிடக்கும் நிலையில், தற்போது எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதற்காக அனைவரும் கருப்புச் சட்டையில் வந்திருந்தனர். அதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

 

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கனிந்த இதயம் கொண்ட இரும்புப் பெண்மணி என்று அனைவராலும் போற்றப்பட்டவர் ஜெயலலிதா. 34 ஆண்டுகள் உலகமே வியக்கும் வகையில் ஓய்வு இல்லாது உழைத்து கழகத்தை வெற்றியில் அமர்த்தியவர். இப்படிப்பட்ட போற்றுதலுக்குரிய ஜெயலலிதா நம் அனைவரையும் கண்ணீர் கடல் அலையில் ஆழ்த்திவிட்டு நம்மை விட்டும், இந்த மண்ணை விட்டும் மறைந்து விட்டார்.

 

ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் கம்பீரமாக நிலைத்த புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது அன்பு உடன்பிறப்புகளாகிய நாம் அவரது நினைவுகளைப் போற்றி நினைத்து நெஞ்சம் உருகும் இந்த வேளையில் அவருக்கு நாம் ஆற்ற வேண்டிய நன்றிக் கடன்களை நிறைவேற்ற வேண்டும். அதிமுகவை தேர்தலில் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று சபதமேற்று நாம் களப்பணியில் ஈடுபட வேண்டும்'' என உறுதிமொழி ஏற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்