பொள்ளாச்சியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் வெயிட் லிப்டிங் எனப்படும் பளு தூக்கும் போட்டியில் ஆர்வம் காட்டி வருகிறார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் கிட்டம்மாள். 82 வயது மூதாட்டியான இவர் அவருடைய பேரன்களுடன் வசித்து வரும் நிலையில், பேரன்கள் ஜம்மில் ஒர்க் அவுட் பண்ணுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பேரன்கள் இருவரும் தேசிய அளவில் பளு தூக்கும் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தநிலையில் பாட்டி கிட்டம்மாளுக்கும் பளு தூக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்துள்ளது. பேரன்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்து அவரும் ஆர்வத்துடன் உடற்பயிற்சி செய்து வந்தார். பாட்டியின் ஆர்வத்தைக் கவனித்த உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் சதீஷ் அவரை முறைப்படி பயிற்சிக்கு உட்படுத்தி பளு தூக்கும் போட்டியில் பங்கு பெற அறிவுறுத்தினார். அண்மையில் 'இந்தியன் பிட்னஸ் ஃபெடரேஷன்' என்ற அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட பெண்களுக்கான பளு தூக்கும் போட்டியில் கிட்டம்மாள் கலந்து கொண்டு முதல் முயற்சியிலேயே 50 கிலோ எடையைத் தூக்கி ஐந்தாவது இடத்தைப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு 'ஸ்ட்ராங் மேன் ஆஃப் தி இந்தியன்-24' என்ற பட்டத்தை அந்த அமைப்பு கொடுத்துள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டி கிட்டம்மாள் ''என்னுடைய பேரன்கள் வீட்டில் வெயிட் தூக்குவார்கள். அதைப் பார்த்து நானும் வெயிட் தூக்கி பார்த்தேன். முதலில் 25 கிலோ அரிசி மூட்டையைத் தூக்கினேன். எனக்கு ஒரு ஆர்வம் வந்தது. சரி நாமும் இதைச் செய்து பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் செய்தேன். என்னுடைய பேரன் ஜிம்முக்கு கூட்டிட்டு வந்தான். மாஸ்டர் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. வயசு காரணம் இல்லைங்க என்னய மாதிரி இருப்பவர்களும் ஜெயிச்சு நாட்டுக்கு பேரும் புகழும் வாங்கிக் கொடுக்கலாம்'' என்றார்.