பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது கொளத்தூர் ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த வித்யா என்பவர் பணி செய்துவருகிறார். அதே ஊரைச் சேர்ந்த திமுகவினர் சிலர் ஊராட்சி மன்றத் தலைவரைப் பணி செய்யவிடாமல் இடையூறு செய்துவருகின்றனர். கடந்த 18ஆம் தேதி ஊரட்சி மன்ற அலுவலகத்தில் புகுந்து அங்கிருந்த ஊராட்சி ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
ஊராட்சி மன்றத் தலைவர் தங்கள் கட்சி அதிமுக மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரனிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் வித்யா, மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், ஆலத்தூர் ஒன்றியச் செயலாளர் அண்ணன் மற்றும் தங்கள் கட்சியினருடன் திமுகவினரின் அராஜக போக்கைக் கண்டித்தும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகுந்து ஆவணங்களை எடுத்துச்சென்ற திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், எடுத்துச் சென்ற ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்க கோரியும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெங்கட பிரியாவைச் சந்தித்து புகார் அளித்துள்ளனர். இதனால் ஆலத்தூர் ஒன்றியத்தில் அதிமுக, திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.