காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; இல்லையேல் நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என ஆவேசப்படும் (?) அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.
இதனை உற்று கவனித்து வரும் தமிழக விவசாய சங்கத்தினரும் எதிர்கட்சிகளும், "தமிழக எம்பிக்கள் சபையை முடக்குவதைத் தவிர்த்து விட்டு, ஒட்டுமொத்தமாக எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்வதுடன் பாஜக அரசுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில், நேற்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினரான நவநீதகிருஷ்ணன் எழுந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆவேசமாகப் பேசினார். ஒருக்கட்டத்தில், வாரியம் அமைக்காது போனால் அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்வோம் என்றார். இவரின் பேச்சு அனைத்து தரப்பிலும் பெரிதாகப் பேசப்பட்டன.
நவநீதகிருஷ்ணனின் பேச்சில் அதிர்ந்த எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களை சார்ந்தவர்களும், "அதிமுக எம்.பி.க்கள் தற்கொலையெல்லாம் செய்து கொள்ள வேண்டாம். ராஜினாமா செய்தாலே போதும். அதுவே அவர்களின் உண்மையான உணர்வினை வெளிப்படுத்துவதாக இருக்கும்" என்று கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் அதிமுக எம்பிக்களில் பலருக்கும் ராஜினாமா செய்யவதில் விரும்பமில்லை என்ற செய்தி கசிந்துள்ளது. காவிரி டெல்டா பகுதிகளைச் சேர்ந்த எம்பிக்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்ய தயார் என்றும், மற்ற எம்பிக்களோ, "போராட்டம் நடத்துவதே பெரிய விசயம். இதில் ராஜினாமா செய்ய வேண்டுமா?" என கேள்வி எழுப்புகிறார்களாம். இதனைத்தொடர்ந்து இன்று தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக எம்பிக்கள் சிலர் சந்தித்து ராஜினாமா விவகாரம் குறித்து ஆலோசித்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.