மாஜி அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் இன்று காலை முதல் மதுரை, சென்னை ஆகிய ஊர்களில் இருந்து 3 கார்களில் வந்துள்ள ஒரு பெண் அதிகாரி உள்பட 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் விஜயபாஸ்கரின் அப்பா மற்றும் அம்மா மட்டுமே இருப்பதால் இலுப்பூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து குவிந்துள்ள அதிமுகவினர் வீட்டின் முன்னால் நிற்கின்றனர்.
பாஜகவின் அராஜக போக்கால் இப்படி நடப்பதாக கூறும் அவரது ஆதரவாளர்கள், தேர்தலில் பதில் சொல்வோம் என்றும் கூறி வருகின்றனர். மாலை வரை சோதனை தொடரும் என்ற நிலையில் ஒரு காரில் சிலர் வெளியில் சென்றுள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் வெளியில் சென்ற அமலாக்கத்துறையினரின் கார் எங்கே சென்றுள்ளது என்று தேடி வருகின்றனர்.
மேலும் ஏற்கனவே ரைடுகளில் சிக்கி வெளியில் உள்ள கறம்பக்குடி குளந்திரான்பட்டு மணல் மாஃபியா கரிகாலனின் சகோதரர் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மா.செ கருப்பையாவுடன் நெருக்கமாக உள்ள மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் அவருக்கு அரசு ஒப்பந்தங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தார் என்பதும் இப்போது அதிகாரிகளுக்குத் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் தங்கமணியை ஓரம்கட்டிவிட்டு எடப்பாடியிடம் கடுமையாக மல்லுக்கட்டி பாசறை கருப்பையாவுக்கு சீட்டு வாங்கிக் கொடுத்துள்ளார். இதேபோல மேலும் சிலருக்கு சீட்டு கிடைக்க பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் விஜயபாஸ்கரிடம் தொடர்பில் உள்ள திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பாசறை கருப்பையா மற்றும் அவரது தம்பி கரிகாலன் வீடு, மேலும் சில வேட்பாளர்கள் வீடுகளுக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலிருந்து சிக்னல் கிடைத்தால் ரைடு நிச்சயம் என்கின்றனர் துறை சார்ந்தவர்களே.