லீவு கிடைக்கும் என்பதற்காகவே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். ஜெயலலிதா இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை நாங்கள் பொய் சொன்னோம் என்று கூறியதில் ஆரம்பித்த அவர் ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை, டிடிவி.தினகரன் திருடினார் என்று சமீபத்தில் பேசி அதிமுகவினரேயை அதிர வைத்தார்.
இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை பேச்சை அமைச்சர் அரங்கேற்றியுள்ளார். சிவகங்கை அரண்மனை வாசல் முன் காவிரி மேலாண்மை ஆணையம் பெற்றுத்தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நம்பிக்கையில்லா தீர்மானம் உள்பட அனைத்திலும் இந்த ஆட்சி வெற்றி பெற்று வருகிறது. ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்பதற்காக எதற்கெடுத்தாலும் போராட்டம் தூண்டி விடப்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் கிராமங்களிலும் பரவியது. மாணவர்கள் தூண்டி விடப்பட்டு போராடுகின்றனர். ஏதோ ஒரு போராட்டம்.. லீவு வேண்டுமே என நம்முடைய குழந்தைகளும், குட்டிகளும், கல்லூரி மாணவர்களும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் என அவர் பேசினார்.
தமிழகத்தில் நடந்த தன்னெழுச்சி உணர்வுப்பூர்வ போராட்டம் என்ற பெயரை பெற்று தந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெறும் லீவுக்காக மாணவர்கள் பங்கேற்றார்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசம் விமர்சனம் செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.