Skip to main content

மீண்டும் கடலில் கச்சா எண்ணெய் கசிவு-கலக்கத்தில் மீனவர்கள்

Published on 05/03/2023 | Edited on 05/03/2023

 

Again the crude oil spill in the sea

 

கடலில் கலந்த கச்சா எண்ணெய் கசிவினால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. கடலுக்கு அடியில் அமைந்துள்ள சிபிசிஎல் பைப் லைனை முற்றிலும் அகற்ற வேண்டும்" என நாகூரில் நடந்த ஏழு கிராம மீனவர்கள் கூட்டத்தில் அதிரடியாக முடிவு செய்துள்ளனர்.

 

நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்தின் பைப் லைன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென உடைந்து, நாகூர் முதல் வேளாங்கண்ணி வரையிலான கடல் நீர் முழுவதும் பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் படர்ந்துள்ளது. கடலில் படர்ந்துள்ள கச்சா எண்ணெய்யின் வீரியத்தால் கடலோரத்தில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்களுக்கு கண் எரிச்சல், சுவாசக் கோளாறு ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

நேற்று காலை மீனவர்கள் வந்து கடற்கரையில் பார்த்த பொழுது அங்கு பைப் லைனில் இருந்து மீண்டும் கச்சா எண்ணெய் கசிந்து கொண்டிருந்தது. இதனால் ஆவேசமடைந்த நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் பைப் லைனை முற்றிலும் அகற்ற வேண்டும் என  இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினர். மீனவர்களின் போராட்டம் காரணமாக அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வேலை நிறுத்த போராட்டமானது மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

 

அதேநேரம் உடைப்பு ஏற்பட்ட குழாயை அடைக்கும் பணி நிறைவு பெற்றதாக சிபிசிஎல் நிறுவனம் தெரிவித்திருந்தது. குழாயின் பணி காலம் இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளதால் அதன் பிறகே அதனை முழுமையாக அகற்ற முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பட்டினச்சேரி மீனவர் கிராமத்தில் சிபிசிஎல் கச்சா நிறுவன குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளதால் பழுதை சரி செய்யும் பணியில் அந்நிறுவன ஊழியர்கள் மீண்டும் ஈடுபட்டுள்ளனர். சீரமைப்பிற்கு பிறகும் கச்சா எண்ணெய் கசிவு அங்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கடலுக்கு அடியில் செல்லும் குழாய்களை அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் மற்றும் மீன்வர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மீனவர்களின் பிரச்சினையில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Decisive action should be taken on the problem of fishermen CM MK Stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (21.03.2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (22.03.2024) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது. அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. 21.03.2024 அன்று (நேற்று) தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திகிறேன். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
20 Rameswaram fishermen incident

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று (20.03.2024) காலை ஏராளமான விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றிருந்தனர். அவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் 20 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகச் சிறைபிடித்து கைது செய்தனர். அதோடு மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் விசாரணைக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்  20 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.