கடலூர் மாவட்டம் வல்லம்படுகையில் கொள்ளிடம் ஆற்றில் உப்பு தண்ணீர் புகாதவாறு தடுப்பணை கட்டுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கடலூர் மற்றும் நாகை மாவட்ட கொள்ளிட கரையோர கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், விவசாயிகள், சிதம்பரம் வர்த்தகசங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிதம்பரம் நகராட்சி முன்னாள் தலைவர் சந்திரபாண்டியன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் இளங்கீரன், விவசாய சங்கங்களின் கூட்டியக்கங்களின் செயலாளர் ரவீந்திரன், சிதம்பரம் வர்த்தக சங்க தலைவர் சதீஷ், கொள்ளிடம் கிருஷ்ணன், நடுத்திட்டு ஜெகசண்முகம், பழையநல்லூர் சீனுவாசன், திட்டுக்காட்டூர் பாரதி, ரோட்டரி சங்க ரவிச்சந்திரன், வடக்குமாங்குடி நீலமேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கொள்ளிடம் ஆற்றில் உப்பு தண்ணீர் புந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும், இது வாழ்வாதாரப்பிரச்சினை என்றும், தடுப்பணை கட்டுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசினார்கள். இந்த கூட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளிடம் ஆற்றில் உப்பு தண்ணீர் உள்ளே புகாமல் இருக்க அளக்குடிக்கும் கரைமேடு கிராமத்துக்கும் இடையே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பணை கட்டுவது குறித்து இருமாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து முறையிடுவது. காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் ம. ஆதனூர்- குமராமங்கலம் இடையே கதவணை திட்டத்தை அரசு உடனே துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை திட்டத்தை அரசு வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும், மேலும் கொள்ளிடம் ஆற்றில் கதவணைப் பணிகளை உடனே துவக்கிட வேண்டும். இல்லை என்றால் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
-அ. காளிதாஸ்