அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் வரும் டிசம்பர் 7ஆம் தேதி அன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறும். போட்டியிட விரும்புவோர் டிசம்பர் 3ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 03.00 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என அக்கட்சி தலைமை நேற்று (02/12/2021) அறிவித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் வேட்பு மனு விநியோகம் இன்று (03/12/2021) காலை தொடங்கியது. இந்த நிலையில், அ.தி.மு.க. கட்சியில் நீண்ட நாள் உறுப்பினராக இருப்பவர் சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த பிரசாந்த் சிங். இவர் இன்று காலை அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தார். அதைத் தொடர்ந்து, தான் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவதாக நிர்வாகிகளிடம் தெரிவித்து, அலுவலகத்தின் முதல் தளத்திற்கு சென்ற அவர், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட மனு வேண்டும் என்று கேட்டதாகவும், அக்கட்சி தலைமை நிர்வாகிகள் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர், வெளியே வந்த பிரசாந்த் சிங் அ.தி.மு.க. தலைமை தனக்கு மனுவை வழங்கவில்லை, மேலும் கட்சி தலைமை மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. கட்சியினர் அடி, உதைத்து வெளியே அனுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.