தாணிக்கோட்டகம் அதிமுகவைச்சேர்ந்த காளிதாசன் என்பவரை மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் பலத்தக்காயத்தோடு சரிந்து விழுந்தவரை தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு காவல் சரகம் தாணிக்கோட்டகத்தை சேர்ந்தவர் காளிதாசன். இவர் அதிமுகவில் முன்னாள் அமைச்சர் ஜெயபாலின் ஆதரவாளராக இருந்துவருகிறார். அந்த பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளைகளுக்கு எதிராக பேசிவருபவர். மானங்கொண்டான் ஏரியை தூர்வாருகிறோம் என்கிற பெயரில் நிதி ஒதுக்கி, அந்த நிதியையும், ஏரியில் உள்ள மணலையும் கொள்ளையடிப்பதாக சிட்டிங் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட மணல் கடத்தல்காரர்களையும் தொடர்ந்து கண்டித்து குடைச்சல் கொடுத்துவந்தார். அதோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கும் விசாரணையில் இருந்துவருகிறது.
இந்தநிலையில் தாணிக்கோட்டகம் சின்ன தேவன் காட்டிலிருந்து குலாலர் காட்டிற்குச் செல்லும் வழியில் காளிதாஸனை இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத 3 நபர்கள் அரிவாளால் தலை மற்றும் தோள்பட்டையில் வெட்டியதில் பலத்த காயத்தோடு சரிந்தார். படுகாயத்தோடு கிடந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்து வாய்மேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. காளிதாசனுக்கு பலதரப்பிலும் எதிர்ப்புகள் இருந்துள்ளது. வெட்டியவர்கள் மணல்குவாரி அதிபர்களா, அல்லது அதிமுகவில் உள்ள எதிர்ப்பாளர்களா, அல்லது சொந்த பகையா என விசாரித்து வருகின்றனர்.