கமலும், ரஜினியும் திரையில் நடித்தால் போதும், இனி தரையில் நடிக்க வேண்டாம் என இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் கௌதமன் நெடுவாசல் போராட்டம் தொடங்கியது முதல் பல முறை நெடுவாசல் போராட்ட களத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது நீட் தேர்வுக்கு விளக்கு வேண்டும் என்பதை தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள எம்.பி.க்களை நேரில் சந்தித்து மனு கொடுத்து வருகிறார். இந்த நிலையில் திருச்சி எம்.பி. குமாரை சந்தித்த பிறகு நெடுவாசல் வந்தார். அங்கு அப்பகுதி மக்களிடம் கலந்துரையாடிய பிறகு தெருமுனைப்பிரசாரத்தில் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும் போது.. நீட் தேர்வுக்கு விளக்கு அளிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு சட்டமாக இயற்றி கொடுத்த போதும் மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. அதனால் தான் தமிழக எம்.பிகளை பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி மனு கொடுத்து வருகிறோம். மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் பாராளுமன்றத்தை முற்றுகையிடவும் செய்யலாம்.
நீட் தேர்வுக்கு 10 நாட்கள் முன்பு வரை விளக்கு அளிக்கவில்லை என்றால் ஜல்லிக்கட்டுக்காக, நெடுவாசலகுக்காக தமிழகத்தில் மாணவர்கள் கொந்தளித்து எழுந்ததைப் போல நீட்டுக்காகவும் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.
இயற்கை எரிவாயு எடுப்பதற்காக இந்திய அரசு பல சூழ்ச்சியான சட்ட திருத்தங்களை செய்து வைத்துள்ளது. அந்த சட்டத்தை எடுத்துக் கொண்டு இரவில் கையெழுத்தை போட்டுக் கொண்டு நெடுவாசல் வர முயற்சிக்கலாம். ஆனால் எந்த வடிவத்திலும் நெடுவாசலுக்குள் அவர்களை இந்த மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். மீறி வந்தால் எங்கள் மக்களை பிணமாக்கிவிட்டு தான் உள்ளே வர முடியும். இது எங்கள் வாழ்வாதார உரிமை
மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர் தர்மேந்திபிரதானின் பேச்சு திமிறான, ரத்த வெறிபிடித்த பேச்சாக உள்ளது. தமிழக அரசை பயமுறுத்தி அனுமதி வாங்கி வந்தாலும் நாங்கள் விடமாட்டோம்.
கமலும் ரஜினியும் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு.. அவர்கள் திரையில் நடித்தால் போதும் இனி தரையில் நடிக்க வேண்டாம். தமிழகத்தில் மாணவர்கள், மீனவர்கள், விவசாயிகள் போராட்டம் நடந்த போது எல்லாம் மோடிக்கு பின்னால் இருந்து கொண்டார்கள். இப்போது முதல்வர் கனவில் அரசியலுக்கு வருகிறார்கள். கதாநாயகனாக நடித்தவர்கள் இனி அப்பா, தாத்தா வேடங்களில் நடிக்கலாம் முதலமைச்சராக வேடம் போட வேண்டாம். எங்கள் மக்கள் ஒரு போதும் ஏமாறமாட்டார்கள்.
மேலும்.. பாரம்பரிய, சித்த மருத்துவத்திற்கும் கட்டுப்பாடுகளை விதிக்கப்படுகிறது. 3.80 லட்சம் தொண்மை கொண்ட தமிழனத்தின் உள்ள சித்தர்கள் எழுதிய சுவடிகளில் இருந்து கண்டறியப்படும் மருத்துவத்தை அழிக்க அரசாங்கம் துணை போக வேண்டாம் என்றார்.
Published on 22/02/2018 | Edited on 22/02/2018