நாகர்கோவில் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆல்வன். பிரபல ரவுடியான இவர், கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் ஆவர். குறிப்பாக, இவர் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஒரு ரவுடியின் கொலை வழக்கில் தொடர்புடையவர். இவர் மீது, 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சிகள் வழக்குகள் உள்பட மொத்தம் 13 வழக்குகள் போலீசார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவர் மீது பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஆல்வன் நெடுங்காலமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். அதனால், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில், தனிப்படை அமைத்து ஆல்வினை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், ரவுடி ஆல்வன் கொடிசியா அருகே பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிகாலை 2: 30 மணியளவில் ஆல்வின் இருந்த பகுதியை சுற்றி வளைத்து போலீசார் பிடிக்க முயன்றனர்.
அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலைமை காவலர் ராஜ்குமாரை ரவுடி ஆல்வின் வெட்டினார். இதில் ராஜ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், ஆய்வாளர் கார்த்திகேயன் துப்பாக்கியால் ஆல்வின் மீது சுட்டார். இதில், ஆல்வினை பிடித்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவையில் பிரபல ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுபிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.