கோவை பீளமேட்டில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவரிடம் சீனியர் மாணவர்கள் சிலர் ராகிங் செய்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் 7 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், “கல்லூரிகளில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகிங் நடப்பதற்கு முன்பாகவே எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கல்லூரியில் ராகிங் தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ராகிங் தொடர்பாக யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்ற விபரங்கள் அறிக்கையாக கல்லூரியில் பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும்.
கல்லூரியில் உள்ள ராகிங் தடுப்பு குழுக்கள் மூலம் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு தங்கள் கல்லூரிகளில் ராகிங் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ராகிங் குறித்து மாணவர்களின் புகார்களை எளிதில் பெறும் வகையில் கல்லூரி முதல்வர்கள், துறைத் தலைவர்கள் செயல்பட வேண்டும். இந்த உத்தரவுகளை செயல்படுத்துவதில் எவ்வித சுணக்கமும் காட்டக்கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.