விழுப்புரத்தில் ஏழு வயது மகளை பெற்ற தாயே கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவத்தில் தாய் கொடுத்திருக்கும் வாக்குமூலம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது பூட்டை எனும் கிராமம். அங்கு வசித்து வருபவர்கள் பிரகாஷ்-சத்யா தம்பதி. லாரி ஓட்டுநராக பிரகாஷ் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது குழந்தையான அதிசயா(7 வயது) இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில் விளையாடச் சென்ற சிறுமி அதிசயாவை காணவில்லை என பிரகாஷ் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீசார் விசாரணை செய்ததில் தாய் சத்யாவோடு சிறுமி அதிசயா சென்றது தெரிய வந்தது. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து காணாமல்போன சிறுமி அதிசயா குறித்து தாயிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சத்யா முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் தாய் சத்யாவே 7 வயது மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக தெரிவித்தது போலீசாருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. எதற்காக இந்த கொலை செய்யப்பட்டது என்பது தொடர்பாக சத்யாவிடம் போலீசார் விசாரித்த போது அதே பகுதியில் சிலரிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை அமாவாசை தினத்திற்குள் தருவதாகவும் கடன்காரர்களிடம் சத்யா தெரிவித்திருந்திருக்கிறார். ஆனால் அமாவாசை தினத்திற்குள் பணத்தை தயார் செய்ய முடியாததால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த சத்யா, துக்க நிகழ்வு நடந்த வீட்டில் கடன்காரர்கள் பணம் கேட்க மாட்டார்கள் என நினைத்து 7 வயது மகளை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்துள்ளார். கடன்காரர்களுக்கு பயந்து பெற்ற மகளை தாயே கிணற்றில் தள்ளி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீட்கப்பட்ட சிறுமி அதிசயாவின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.