ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் செல்வகுமார் என்பவர் வீட்டுக்கு, கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி வந்த நபர்கள், தாங்கள் வருமான வரித்துறையில் இருந்து வந்ததாகக் கூறி வீடு முழுவதும் அதிரடியாக சோதனையிட்டுள்ளனர். ரூபாய் 6 லட்சம் ரொக்கம் மற்றும் 60 சவரன் தங்க நகைகளைக் கைப்பற்றிய அந்த நாடக கும்பல், ஆவணங்களைக் கேட்டுள்ளனர்.
நகைகளுக்கான ஆவணங்களை அவர் காண்பிக்கவே, அவற்றைத் திருப்பிக் கொடுத்துவிட்டு ரூபாய் 6 லட்சம் ரொக்கத்துக்கான ஆவணங்களை வேலூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் காண்பித்து பெற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டு, அந்த ரொக்க பணத்தை எடுத்துச் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில், வேலூர் வருமான வரித்துறை அலுவலகத்திற்குச் சென்று செல்வகுமார் தரப்பு விசாரித்தபோது, கொள்ளை கும்பல் நாடகமாடியது அம்பலமானது.
இதுகுறித்து செல்வகுமார், ராணிப்பேட்டை மாவட்டக் காவல்துறையிடம் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற ஆறு பேர் கொண்ட கும்பலைத் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதனிடையே, செல்வகுமார் வீட்டிற்கு அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பட பாணியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் காரணமாக அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.