சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் முனியப்பன் நகரைச் சேர்ந்தவர் ஜெயவேல் (67). இவர், தனது உறவினர்கள் தங்கபழம், பிரேம் ஆனந்த், சரண்யா ஆகியோரை கூட்டு சேர்த்துக் கொண்டு, சேலத்தில் அமுதசுரபி கூட்டுறவு மற்றும் சிக்கன நாணய சங்கம் என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனத்தை தொடங்கினார். இதையடுத்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இந்த சங்கத்தின் கிளைகளைத் தொடங்கினர். இந்த சங்கத்தில், குறுகிய கால வைப்புகளுக்கு அதிக வட்டி வழங்கப்படும் என அறிவித்தனர். கவர்ச்சிகரமான அறிவிப்பை பார்த்து நம்பிய ஏராளமான முதலீட்டாளர்கள் அமுதசுரபி கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் முதலீடுகளைக் கொட்டினர். ஆனால் முதிர்வுக் காலம் முடிந்த பிறகும் உறுப்பினர்களுக்கு அசல், வட்டி தொகையைத் தராமல் சங்க நிர்வாகிகள் இழுத்தடித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் இதில் முதலீடு செய்து ஏமாந்து போன சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த பாஸ்கரன் (52) என்பவர், பொருளாதார குற்றப் பிரிவில் அமுதசுரபி கூட்டுறவு நிறுவனத்தின் மீது புகாரளித்தார். அதில், தனது 2.92 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்து இருந்தார். இவரைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், இந்த சங்கத்தின் மீது புகார்களைக் கொடுத்தனர். டிஎஸ்பி சீனிவாசன் மற்றும் காவல்துறை நடத்திய விசாரணையில், அமுதசுரபி கூட்டுறவு நிறுவனம் 58 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
முதலீட்டாளர்கள் நெருக்கடி அளித்ததால் சங்க நிர்வாகிகள் தலைமறைவு ஆகிவிட்டனர். இந்நிலையில், சங்கத்தின் தலைவராக செயல்பட்ட ஜெயவேல், கணக்காளர் கண்ணன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர், இந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவரான தங்கபழத்தை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி கைது செய்தனர். அவரை கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தங்கபழத்தை காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவினர் முடிவு செய்தனர். அதையடுத்து டான்பிட் நீதிமன்றத்தில் தங்கபழத்தை நான்கு நாள்கள் காவலில் எடுக்க அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து தங்கபழத்தை காவலில் எடுத்த பொருளாதார குற்றப்பிரிவினர், முதலீடாக பெற்ற தொகையை என்ன செய்தனர்? அதன்மூலம் எந்தெந்த இடங்களில் சொத்துகளை வாங்கியுள்ளனர்? தங்கம், கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்துள்ளனரா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றுடன் (ஜூன் 22, 2023) தங்கபழத்தின் காவல் முடிகிறது. விசாரணை முடிந்த பிறகு அவரை இன்று மாலை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இது ஒருபுறம் இருக்க, தலைமறைவாக உள்ள பிரேம் ஆனந்த், சரண்யா ஆகியோரை தேடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.