சேலத்தில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 5 ரவுடிகளை ஒரே நாளில் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தைச் சேர்ந்த மருதமுத்து மகன் பரத் (23), இதே பகுதியில் உள்ள வீர வீதியைச் சேர்ந்த கலைச்செல்வம் மகன் சாமுவேல் (20), விஜயகுமார் மகன் பாலமுருகன் (20); கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கிருஷ்ணப்பா காலனியைச் சேர்ந்த சங்கர் மகன் குட்டி என்கிற நந்தா என்கிற நந்தகுமார் (24) மற்றும் சேலம் கிச்சிப்பாளையம் எஸ்எம்சி காலனியைச் சேர்ந்த சங்கர் மகன் சசிகுமார் (27) ஆகிய 5 பேர் மீதும் கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி வழக்குகள் விசாரணையில் உள்ளன.
இவர்கள் 5 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்துள்ளனர். இதையடுத்து, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர துணை ஆணையர்கள் லாவண்யா, கவுதம் கோயல் ஆகியோர் மாநகர காவல்துறை ஆணையருக்கு சிபாரிசு செய்தனர். அதன்பேரில், காவல்துறை ஆணையர் விஜயகுமாரி அவர்கள் ஐந்து பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதன்பேரில், அவர்கள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 ரவுடிகள் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.