தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 47வது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 3 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த புத்தகக் காட்சியானது ஜனவரி 21 ஆம் தேதி (21.01.2024) வரை நடைபெற உள்ளது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 08.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 08.30 மணி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ள இந்த புத்தகக் காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை முதல் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சென்னை புத்தகக் காட்சி இன்று ஒருநாள் மட்டும் (08.01.2024) நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை பாதிப்பு காரணமாக புத்தக அரங்குகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் புத்தகக் காட்சி இன்று நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில், நாளை முதல் (09.01.2024) புத்தகக் காட்சி வழக்கம் போல் செயல்படும் எனவும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.