ராஜராஜ சோழனின் 1037 ஆவது சதய விழா இன்றும் நாளையும் கொண்டாடப்பட உள்ளது. தஞ்சை கோவில் ராஜராஜ சோழனின் சதயவிழாவை முன்னிட்டு விழாக் கோலம் பூண்டுள்ளது. எனினும் ராஜராஜ சோழனின் சதயவிழாவினை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை நெடுநாளாக இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது ராஜராஜ சோழனின் சதய விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பு குறித்து தமிழக முதல்வர் செய்தி மக்கள் தொடர்புத்துறை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது பின்வருமாறு...
“மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை நவம்பர் மூன்றாம் நாள் ஆண்டு தோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடப்படும்.
மேலும், தஞ்சாவூரிலுள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.