Skip to main content

கோரிக்கை வைத்த மாணவர்கள்; மூன்றே நாட்களில் நிறைவேற்றிய திமுக எம்எல்ஏ!

Published on 04/04/2023 | Edited on 04/04/2023

 

rishivandiyam dmk mla vasantham karthikeyan appreciated by peoples and students

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் அதிகமான அளவில் மலைவாழ் மற்றும் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து வெளியூர் சென்று படித்து வரும் மாணவர்கள் பள்ளி கல்லூரியில் சேரவும், தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெறவும், வேலைவாய்ப்புகளுக்காகவும் உடனடியாக சாதி சான்றிதழ் பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இது தொடர்பாக விரைவில் சாதி சான்றிதழ்கள் கிடைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

 

இது குறித்து தகவல் அறிந்த ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட அந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனியாக வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என அரசு மூலம் பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார். அதோடு லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் மலைவாழ் மற்றும் பழங்குடியின பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக் கோரி மனுக்கள் பெறும் நிகழ்ச்சியை உடனடியாக ஏற்பாடு செய்தார்.

 

சாதி சான்றிதழ் வேண்டுமென கோரிக்கை வைத்து மூன்று நாட்களில் அதனை நிறைவேற்றும் விதமாக உடனடியாக சாதி சான்றிதழ்கள் கிடைக்க தனி சிறப்பு முகாம் ஏற்பாடு செய்த ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் தொடர்ந்து அக்கிராமத்தில் வீடுகள் இல்லா ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் பெற்று அதிகாரிகள் மூலம் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான பணிகளில் இறங்கியுள்ளார்.

 

rishivandiyam dmk mla vasantham karthikeyan appreciated by peoples and students

 

மேலும் சாலை வசதி, பாசன வாய்க்கால் மேம்பாடு வசதி குறித்து பொதுமக்கள் அளித்த அனைத்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு இருந்தவர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் தங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டதால் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாதி, மதமற்றவர் சான்றிதழ் வழங்க விண்ணப்பம்; அதிரடி தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம்

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
 The High Court Judgment on Application for issuance of Caste, Non-Religion Certificate

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘எனக்கு சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வேண்டும் என்று திருப்பத்தூர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தேன். ஆனால், அந்த மனு மீது இதுவரை எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. எனக்கு சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் வந்தது. அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் கேட்டுள்ள மனுதாரரின் விருப்பம் மிகவும் பாராட்டுக்குரியது. ஆனால், அதே வேளையில், இது போன்ற சான்றிதழ்களை வழங்கினால் சில பிரச்சனைகளும் ஏற்படும். 

குறிப்பாக சொத்து, வாரிசுரிமை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கான தனிப்பட்ட சட்டங்களை பயன்படுத்துவதில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும், அரசு உத்தரவுப்படி, கல்வி நிறுவனங்களில் உள்ள விண்ணப்பங்களில் சாதி, மதம் குறித்த விவரம் கோரும் இடத்தை பூர்த்தி செய்யாமல், அப்படியே விட்டு விட உரிமை உள்ளது. அதை அதிகாரிகள் யாரும் கேள்வி எழுப்ப முடியாது.

மேலும், சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வட்டாட்சியர்களுக்கு அதிகாரம் இல்லை. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வழங்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. இந்த நிலையில், சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது” எனக் கூறி மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Next Story

“மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலைகுனிவு” - திருமாவளவன் கண்டனம்

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Thirumavalavan MP condemns the beaten kallakurichi student issues

“மனிதாபிமானமுள்ள, மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது” எனப் பட்டியலின மாணவி மீது நடத்தப்பட்ட வன்கொடுமை தாக்குதலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள திருநருங்குன்றம் கிராமம், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்துள்ள வன்கொடுமைகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பை முடித்துள்ள மாணவி நீட் தேர்வு எழுதி மருத்துவம் பயிலும் கனவில் இருந்துள்ளார். அதற்காக அவர் வீட்டு வேலை செய்ய முடிவெடுத்து, திருவான்மியூர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் முகவர் ஒருவர் மூலம் வீட்டுப் பணியாளராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். வீட்டு உரிமையாளர் அன்டோ மதிவாணன் என்பவர் பல்லாவரம் தொகுதியைச் சார்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆவார். அவரது மனைவி மெர்லின் என்பவர் தான், மாணவியை குரூரமாகக் கொடுமைப் படுத்தியுள்ளார் எனத் தெரிய வருகிறது.

வீட்டு வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்தே பல மாதங்களாக மாணவிக்கு சம்பளம் வழங்காமலும், அவரது குடும்பத்தினரைச் சந்திக்கவிடாமலும், ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை வாங்கியதுடன், மனிதாபிமானமற்ற முறையில் அடித்துத் துன்புறுத்திக் கொடூரமாக வதைத்துள்ளாரென்று தெரியவருகிறது. இது மனிதாபிமானமுள்ள, மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ஈவிரக்கமற்ற இச்செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரையடுத்து கணவன், மனைவி ஆகிய இருவர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்குள்ள குடும்பமெனினும், காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவி, கணவனால் கைவிடப்பட்ட ஒரு தாயின் அரவணைப்பில் வளர்ந்து மருத்துவராகும் கனவுடன் உழைத்திட வீட்டுப் பணியில் சேர்ந்துள்ளார். உழைத்துச் சம்பாதித்துப் படிக்கத் துடிக்கும் ஒரு ஏழைச் சிறுமியை ஊக்கப்படுத்த வேண்டிய பக்குவம் இல்லாமல், நெஞ்சில் ஈரமின்றி இவ்வாறு கொடுமைப்படுத்தும் இவர்களின் கொடிய போக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கணவன் தனது மனைவியை அடிக்கவோ, பெற்றோர் தமது பிள்ளைகளை அடிக்கவோ, ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கவோ கூடாது என்கிற 'மனித உரிமை' குறித்த விழிப்புணர்வு, உலகெங்கும் வளர்ந்துள்ள இக்காலச் சூழலில், இவர்களால் எப்படி இவ்வாறு நடந்து கொள்ளமுடிகிறது என்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. மாணவியை நள்ளிரவு வரை வேலை செய்யச்சொல்லி அடித்ததுடன், சாதியைச் சொல்லியும் இழிவுபடுத்தி கொடுமைப்படுத்தியதாகவும் சொல்லி அந்த மாணவி கதறுவது நெஞ்சை உலுக்குகிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களைக் கைது செய்வது உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கைகளில் அரசு உறுதியாக இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

பதினெட்டு வயதுக்கும் கீழாகவுள்ள சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் குற்றச் செயல்களைத் தடுத்திட அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு தழுவிய அளவில் இது குறித்து விரிவான புலனாய்வை மேற்கொள்ள நீதிபதி ஒருவரின் தலைமையிலான ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டுமெனவும் விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவிக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி அளிக்க வேண்டிய இழப்பீட்டை வழங்குவதுடன், அவருடைய மருத்துவக் கல்விக்கான கனவை நனவாக்கிட ஆவன செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு விசிக சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.