சேலம் அருகே, போலி ஆவணங்கள் தயாரித்து நகைக்கடன்கள் வழங்கியதில் 4.60 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூட்டுறவு சங்க ஊழியர்கள் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். செயலாளர் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே குண்டுக்கல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் உறுப்பினர்களுக்கு நகைக்கடன்கள் வழங்கியதில் மோசடி நடந்துள்ளதாக புகார்கள் கிளம்பின.
இது குறித்த புகாரின்பேரில், குண்டுக்கல் கூட்டுறவு சங்கத்தில் தணிக்கை செய்ய சேலம் மண்டல இணை பதிவாளர் உத்தரவிட்டார். சார்பதிவாளர்கள் நடத்திய தணிக்கையில், மோசடி நடந்திருப்பது உறுதி படுத்தப்பட்டது.
இதையடுத்து, சங்க செயலாளர் பழனிசாமி, உதவி செயலாளர் பெரியசாமி, எழுத்தர் ரகுமணி, நகை மதிப்பீட்டாளர் சேட்டு ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இது குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ''குண்டுக்கல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த தணிக்கையில், இரண்டு விதங்களில் மோசடிகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 172 நகைக்கடன்கள் வழங்கியதில் 1.96 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. அதாவது, போலி நகைகளுக்கும், கணக்கில் வராத நகைகளுக்கும் கடன் கொடுக்கப்பட்டு இருந்தது. இது முதல் வகை.
அடுத்ததாக, சங்க உறுப்பினர்கள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து 119 நகைக்கடன்கள் மூலம் 2.64 கோடி ரூபாய் சுருட்டியிருப்பதும் தெரிய வந்துள்ளது.
மோசடி நடந்துள்ளது குறித்து ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, முறைகேட்டில் ஈடுபட்டதாக உதவி செயலாளர் பெரியசாமி, எழுத்தர் ரகுமணி, நகை மதிப்பீட்டாளர் சேட்டு ஆகிய மூவரையும் சங்கத் தலைவர் சரஸ்வதி டிஸ்மிஸ் செய்துள்ளார்.
நகைக்கடன் மோசடியில் ஈடுபட்ட மேற்சொன்ன சங்க ஊழியர்களுக்குச் சொந்தமான சுமார் 7 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன. செயலாளர் பழனிசாமி மீது தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அவரும் டிஸ்மிஸ் செய்யப்படுவார்,'' என்றனர்.