ஆந்திரா மாநிலத்தில் இருந்து தேனிக்கு சேலம் வழியாக கடத்திச்செல்லப்பட்ட 40 லட்சம் ரூபாய் கஞ்சாவை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து சேலம் வழியாக தேனி மாவட்டத்திற்கு ஒரு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டி.எஸ்.பி. முரளி, ஆய்வாளர் ரவிக்குமார், எஸ்.எஸ்.ஐ.க்கள் சரவணன், குப்புசாமி, செல்வம், காவலர்கள் ரோஜா ரமணன், அருண்குமார், தம்பிதுரை உள்ளிட்டோர் சேலம் எருமாபாளையம் பிரிவு சாலை பகுதியில் புதன்கிழமை (மார்ச் 23) வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வேகமாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை நடத்தினர். அதில் 220 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றின் சந்தை மதிப்பு 40 லட்சம் ரூபாய் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் அந்த காரில் இருந்த ஓட்டுநர், தேனி மாவட்டம் உத்தமபாளைய அருகே உள்ள தேவாரத்தைச் சேர்ந்த குமார் (49) என்பதும், உடன் வந்த அவருடைய கூட்டாளி பெயர் கார்த்தி (34) என்பதும் தெரியவந்தது. இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இச்சம்பவத்தில் மேலும் இருவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. அவர்கள் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.