தமிழ்சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான கருணாஸ், பிறகு குணச்சித்திர வேடத்திலும், ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இதனிடையே முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியை தொடங்கிய நடிகரான கருணாஸ் 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடானை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலா அணியின் பக்கம் இருந்த கருணாஸ் தற்போது திமுக பக்கம் வந்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த கருணாஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கருணாஸ் இன்று காலை திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் கருணாஸை சோதனை செய்தபோது, அவரது பையில் 40 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள், அவற்றைப் பறிமுதல் செய்து விசாரணையைத் தொடர்ந்தனர்.
விசாரணையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நான் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருப்பதாகவும், அதற்காகத்தான் இந்த தோட்டாக்களை எடுத்துச் செல்வதாகவும் அதிகாரிகளிடம் கருணாஸ் தெரிவித்தாக கூறப்படுகிறது. இருப்பினும், விமானத்தில் துப்பாக்கி, தோட்டாக்கள் போன்றவை எடுத்து செல்லும்போது உரிய அனுமதி வாங்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில் கருணாஸ் விமானம் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுத்தனர். பின்னர் அவர் திருச்சி செல்லாமல் வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது.