Skip to main content

முக்தி அடைய தற்கொலை?; அதிர்ந்துபோன ஆன்மீக நகரம்  - திணறும் போலீஸ்

Published on 28/12/2024 | Edited on 28/12/2024
4 people lost their lives in Tiruvannamalai to seek salvation

திருவண்ணாமலைக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு கிரிவலம் வந்துவிட்டு அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர். அப்படி வருபவர்கள் இங்கு அறை எடுத்து தங்குகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியகோட்டை பீர்கனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த மகாகாலா வியாசர், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மகாலஷ்மி, அவரது மகள் 18 வயதான ஜலந்தரி, 14 வயதான முகுந்த் ஆகாஷ் குமார் ஆகியோர், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள டிவைன் ஃபார்ம் ஹவுஸ் ஸ்டே என்கிற அரசு அனுமதி பெறாத பண்ணை விடுதியில் தங்கியுள்ளனர். 

இந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாகத் திருவண்ணாமலை மேற்கு காவல்நிலையத்துக்கு தகவல் தந்துள்ளனர். அதன்படி காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்த்தபோது, நால்வரும் தற்கொலை செய்துகொண்டு இருப்பது தெரியவந்துள்ளது. தற்கொலை செய்துகொண்டவர்கள் முக்தி அடைய இந்த முடிவை எடுத்ததாக ஒரு டைரியில் எழுதி வைத்துள்ளனர் என காவல்துறையினர் கூறுகின்றனர். அவர்களது உடல்களை போலீசார் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த அனுமதி பெறாத விடுதியை திருவண்ணாமலை பேகோபுரம் தெருவில் வசிக்கும் அருள் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்த பண்ணைத் தோட்டமான இதில் இளைஞர்கள் மற்ற நேரங்களில் கூத்தும், கும்மாளமாகவும் இருப்பார்கள் என அக்கம் பக்கம் இருப்பவர்கள் கூறுகின்றனர். இந்த விடுதி மட்டுமல்லாமல் இதுபோல் நூற்றுக்கணக்கில் ஹோம் ஸ்டே என்கிற பெயரில் இயங்குகின்றன. இது மட்டுமல்லாமல் நகரத்துக்குள்ளும் செயல்படும் மடங்களிலும் பக்தர்களை தங்கவைக்கின்றனர். அவர்களிடம் எந்த ஆவணமும் பெறுவதில்லை. இரண்டு மாதத்துக்கு முன்பு மாடவீதியில் உள்ள ஒரு மடத்தில் தெலுங்கானாவை சேர்ந்த ஒருவர் இறந்துபோனார். அவருடன் வந்தவர்கள் அங்கிருந்து ஓடிச்சென்றதால், இறந்தவர் யார் என்பதை கண்டறிவதில் காவல்துறை சில சிக்கல்களை எதிர்கொண்டனர்.

அனுமதி பெறாத விடுதிகள், ஹோம் ஸ்டேக்களை கண்காணிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். இங்கு யார் வருகிறார்கள்? எதற்காக வருகிறார்கள்? எனத் தெரிவதில்லை. பணம் மட்டுமே பிரதானமாக கொண்டு இங்குள்ள விடுதிகள் செயல்படுகின்றன. மாவட்டம் நிர்வாகம், காவல்துறை, மாநகராட்சி அலுவலகம் இணைந்து இதனை ஒழுங்குபடுத்த வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்