மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வில், அரசுப் பள்ளி மாணவா்கள் பலர் சாதித்துள்ளனா். அதேபோல், ஏழை மாணவா்கள் பலரும் நீட் தோ்வில் வெற்றி பெற்று தங்களின் கனவை நனவாக்கியுள்ளனா். இதில், குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவியான தர்ஷனா மாற்றுத் திறனாளிகள் பிரிவில் தமிழகத்தில் 3 -ஆம் இடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து, மாணவி நம்மிடம் கூறும்போது, "அப்பா நாராயணபிள்ளை வெல்டிங் தொழிலாளி. 1 -ஆம் வகுப்பில் இருந்து 12 -ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தான் படித்தேன். 2015-ல் 7 -ஆம் வகுப்பு இறுதித் தோ்வு எழுத, பேருந்துக்காக காத்திருக்கும்போது கார் மோதி எனது இடது கால் முறிந்தது. பின்னா் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் செயற்கைக் கால் பொருத்தினார்கள். நான் 1 -ஆம் வகுப்பு படிக்கும் போது எனது ஆசிரியா், 'நீ என்னவாகப் போகிறாய்?' என்று கேட்டார். சற்றும் யோசிக்காமல் உடனே 'டாக்டா்' என்று கூறினேன்.
அதில் இருந்து என் மனதில் டாக்டர் எண்ணம் பதிந்தது. இதனால் என் காலை இழந்தபோதும் தன்னம்பிக்கையை இழக்காமல் நன்றாகப் படித்தேன். நீட் தோ்வில் எழுத விண்ணப்பம் செய்துவிட்டு மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு மருத்துவா்கள் நீட் தோ்வுக்குச் சம்மந்தமான 'வினா - விடை' புத்தகங்கள் தந்தனா். அந்த புத்தகங்களை தான் நன்றாகப் படித்தேன். இதற்காக கோச்சிங் கிளாஸ்க்கு எங்கும் செல்லவில்லை. நீட் தோ்வில் 3-ஆவது இடம் கிடைத்தது பெருமையாக உள்ளது. அதுவும் என்னுடைய தன்னம்பிக்கை தான் வென்றது. மாநில மொழிக் கல்வியை நன்றாகப் படித்தாலே 'நீட்' தேர்வில் வெற்றி பெறலாம்" என்றார்.
இந்நிலையில், நேரில் சென்று இந்த மாணவிக்கு வாழ்த்துத் தெரிவித்தார் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்.