அடக்கப்பட்ட வர்க்கத்தினரும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரும் ஜீவாதார உரிமைகளைப் பெற்று என்றைக்கு சுதந்திரமான முழு உரிமை பெற்ற மனிதர்களாக ஆகின்றார்களோ அன்றுதான் நாடு முழுமையான சுதந்திரம் அடைந்தது என்பது அர்த்தமாகும் என்றார் அண்ணல் மகாத்மா காந்தி.
அவரது எண்ணத்திற்கும் கனவிற்கும் மாறாக இந்திய நாடு சுதந்திரமடைந்து 71 ஆண்டுகள் கடந்தும் கிராமப்புரங்களில் சிரட்டை மற்றும் இரட்டை தம்ளர் முறை ஒழிக்கப்படவில்லை. அதை விடக் கொடுமை கிராமப்புற நாட்டாமைகளின் ஆதிக்கம் காரணமாக உரிமையைக் கேட்டதற்காகத் தாழ்த்தப்பட்ட மக்கள், கிராமப்புறத்தார்களின் சொந்தங்கள் ஊர் மக்களிடமிருந்து குடும்பம் குடும்பங்களாய் ஊர் தள்ளிவைக்கப்பட்ட கொடூரமும் இலை மறைவு காய் மறைவாக நடக்கின்றன. உயிரோடு சித்திரவதை அனுபவிக்கும் அந்தக் குடும்பங்களின் வேதனையும், கண்ணீரும் வெளியே தெரிவதில்லை. காரணம் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகளே பாராமுகமாய் நடந்து கொள்வது தான்.
நக்கீரன் இணையதளம் அது போன்ற தொரு தேசிய கொடுமையை வெளிக்கொண்டு வந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தின் அம்பைத் தாலுகாவில் வரும் ஆழ்வார்குறிச்சிப் பக்கம் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரக் கிராமம் அழகப்பபுரம். கடனாநதி ஓடுகிற விவசாயக் குடும்பங்களைக் கொண்ட பகுதி. விவசாயம் இவர்களது அடிப்படைத் தொழில்.
அந்தக் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவின் எஸ்.சி. (பி.ஆர்.) பிரிவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்களிருக்கின்றன.
இந்த மொத்தக் குடும்பங்களின் நாட்டாமையாக கிருஷ்ணனும், சைலப்பனுமிருக்கிறார்கள். மக்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டிய இந்த நாட்டாமைகள் டம்மிதான். ஆனால் ஆட்டிப்படைக்கும் அதிகாரம் முத்துக்கிருஷ்ணன், முத்துராஜ் மற்றும் ஜீவா மூவரிடம் உள்ளது. ஏனெனில் இவர்களின் வகையறாக்களின் குடும்பங்கள் இங்கு அதிகமாக உள்ளனர்.
இவர்களின் வகையறாக்களில் 11 குடும்பங்கள் டிராக்டர் முலமாக கடனாநதியின் தென்பக்கமுள்ள ஆற்று மணலைத் தொடர்ந்து கடத்த அந்தப் பகுதியின் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பு அந்தப் பகுதியின் விவசாயிகள் பலருக்கு ஏற்பட்ட நிலையில் அவர்களால் எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில், அவர்களின் மணல் கடத்திய டிராக்டர்கள் பிடிபட்டு ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட, அங்கு அவர்களின் மீது எப்.ஐ.ஆர். ஆகிவிட, அதற்குக்காரணமே அந்தப் பகுதியின் செல்லையாவும், பொன்னுசாமி மகன் ரெங்கராஜனும் என்று தவறாகப்புரிந்து கொண்ட அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிற முத்துக்கிருஷ்ணன் தரப்பு, செல்லையா, ரெங்கராஜன், குண்டுமணி மற்றும் மாடசாமி தரப்புகளைச் சேர்ந்த 8 குடும்பங்களின் 43 பேர்களை ஊர் விலக்கு செய்வதாக சமுதாயக் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார்கள்.
அதன்படி ஊரில் உள்ள அந்த சமூகத்தின் இதர குடும்பங்கள் யாரும், இவர்களிடம் பேசக்கூடாது, ஊரில் நடக்கிற நன்மை தீமைகளில் இவர்கள் கலந்து கொள்ளக் கூடாது, அங்குள்ள கடைகள் விலக்கி வைக்கப்பட்டுள்ள குடும்பத்தார்களுக்கு அத்யாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள் எதுவும் தரக்கூடாது. பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது. அங்குள்ள பொதுக் கோவிலான வனப்பேச்சியம்மன் கோவிலுக்குள் போகக்கூடாது தெய்வத்தை வணங்கக் கூடாது என்ற அடக்குமுறை, ஒடுக்கமுறைக் கட்டுப்பாடுகள், மற்றும் தடை விதிக்கப்பட்டதால் கடந்த மூன்று வருடமாக, வாழ்வாதாரத்திற்கு வேண்டியவைகள் கிடைக்காமல் சித்திரவதையை அனுபவித்து வருகிறார்கள்.
இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒன்றான செல்லையா சொல்கிறார்.
’’தவறான புரிதலின் அடிப்படையில் பழிவாங்கப்பட்ட எங்களின் 8 குடும்பங்கள் ஊர் விலக்கு மற்றும் தடையால் கடந்த மூன்று வருடங்களாக நெருக்கடி மற்றும் ஜீவாதாரச் சித்திரவதையை அனுபவித்து வருகிறோம். எங்களின் தேவைக்கான உணவுப் பொருட்களை வாங்குவதற்காக 7 கி.மீ. தொலைவு போய் வர வேண்டியுள்ளது. இதத் தாங்கமாட்டாத குண்டுமணி குடும்பம் ஊர் முன்னிலையில் தெருவில் விழுந்து வணங்கியதால் ஐம்பதாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அது தாங்காது என்று அந்தக் குடும்பம் மீண்டும் மீண்டும் கூட்டாகத் தெருவில் விழுந்து கும்பிட்ட பிறகு நான்காயிரம் அபராதம் விதித்து ஊராரோடு சேர்த்திருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளை காவல் துறை எஸ்.பி. மற்றும் மாவட்டக் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கைப் புகாராகக் கொடுத்தும் அதிகாரிகளின் நடவடிக்கை இல்லை. இதன் காரணமாக எங்களின் 7 குடும்பத்தார்கள் கடுமையான மன நொடிவு, மன உளைச்சலில் உள்ளோம். ஏறத்தாழ ஆயுள்தண்டனையை அனுபவித்து வருகிறோம். இதன் பின்னணியில் அரசியல் விளையாடுகிறது. சட்டத்திற்குப் புறம்பாக எங்கள் குடும்பங்களின் மீது அடக்குமுறையை ஒடுக்குமுறையை கையாண்டு வருபவர்களின்மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் நிலைமைகள் விபரீதமாகாமல் தடுக்கவேண்டும் என்கிறார் வேதனை தாள மாட்டாமல்.
கிராமப்புறங்களில் ஏ.டிஸ். வைரசாக ஊடுருவியிருக்கும் இந்தக் கொடுமைக்குத் தேவை அவசர ஆபரேஷன். தவறினால் உயிர்களைத் தின்றுவிடும் அபாயம் உருவாகிவிடும்.