கன்னியாகுமரி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி. நகரைச் சேர்ந்த சிவக்குமாரின் மகள் சுகிர்தா(27) சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் கன்னியாகுமரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி சுகிர்தா தனது விடுதி அறையில் சடலமாகக் கிடந்தார். ஊசி மூலம் மருந்து செலுத்திக் கொண்டு சுகிர்தா தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. பின்பு இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விடுதி அறையில் கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றியதில், அது மாணவி எழுதியிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. மேலும், கடிதத்தில் டாக்டர். பரமசிவம், சுகிர்தாவிற்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளதாக எழுதியிருந்தது எனப் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியை தற்கொலைக்குத் தூண்டினார்கள் என்ற அடிப்படையில் பேராசிரியர் பரமசிவம், உடன் படித்த மாணவர் மற்றும் மாணவி ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், குலசேகரம் காவல் ஆய்வாளர் ஜானகி உள்ளிட்டோர் பிற மாணவிகளிடம் சம்பவம் பற்றி விசாரித்து வருகின்றனர். இதனையொட்டி, குமரி காவல்துறை முகநூல் பக்கத்தில், மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருவதாகவும் பதிவிட்டுள்ளது. கூடுதலாக, இந்த தற்கொலை வழக்கை விசாரிக்க பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் எனவும் போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.